இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தங்களுக்கென தனி கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருபவர்கள் பனியர் பழங்குடியினர். இவர்களது தொழில் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள வன பொருட்களை சேகரித்தல், தேனெடுத்தல், காப்பி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வது ஆகியவையாகும்.
இந்தப் பழங்குடியின மக்கள் இன்னும் பின்தங்கிய மக்களாகவே வாழ்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கு சம உரிமை, பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாளம் நகராட்சி தலைவர் பதவி பழங்குடியினர் பெண் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தி.மு.க சார்பில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டில் பனியர் இனத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த சிவகாமி என்ற பழங்குடியினப் பெண்ணுக்கு தி.மு.க சார்பில் போட்டியிட தி.மு.க தலைமை கழகம் வாய்ப்பளித்தது. சிவகாமி 3வது வார்டில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று நிலையில், நேற்று நடைபெற்ற நகரமன்ற தலைவர் பதவிக்காக தி.மு.க தலைமைக் கழகம் சிவகாமியை நகர மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்தது.
அதன்படி போட்டியின்றி சிவகாமி நகர் மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், பனியர் பழங்குடியினர் வரலாற்றில் முதன் முறையாக பனியர் பழங்குடியினர் பெண் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
பனியர் பழங்குடியினர் வரலாற்றில் முதல்முறையாக இப்பதவி வழங்கிய முதலமைச்சருக்கு பனியர் பழங்குடியினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.