கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாமரைக்கரை கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் - வினோதா தம்பதியரின் மகன் பானுபிரகாஷ். இவர் உக்ரைன் நாட்டில் கீவ் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மருத்தும் படித்து வருகிறார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் மூண்டபோது இவரும் அவரோடு படித்து வந்த இந்திய மாணவர்களும் ஊருக்கு செல்ல தயாராகி உள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை. போர் வராது என எண்ணி அங்கேயே இருந்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் மீது போர் தொடுத்தது. போர் சமயத்தில் பானுபிரகாஷ் உள்பட 300 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்குள்ள பதுங்கு குழியில் தங்கியிருந்து உணவு மற்றும் குடிநீர் இன்றி கடும் அவதிகளை சந்தித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் கடந்த 26 ஆம் தேதி கீவ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து ரயிலேறி லிவிவ் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் எல்லையான ஷோப் பகுதிக்கு ரயில் மூலம் சென்றுள்ளனர்.
ஷோப் பகுதியில் இருந்து ஹங்கேரி நாட்டுக்கு செல்ல 15 மணி நேரம் காத்திருந்து போலிஸார் மற்றும் ராணுவத்தில் சோதனைகளுக்கு பின்னர் ஹங்கேரி நாட்டுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் ஹங்கேரி நாட்டில் புத்த பெஸ்ட் என்ற இடத்திலிருந்து இந்திய நாட்டில் அதிகாரிகள் உதவியுடன் விமானத்தில் ஏறி கடந்த 2ஆம் தேதி டெல்லிக்கு வந்துள்ளனர். அதனையடுத்து டெல்லியில் இருந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அடுத்துள்ள தனது சொந்த ஊரான தாவரக்கரை கிராமத்திற்கு பானுபிரகாஷ் வந்துள்ளார். அவரைப் பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.
உக்ரேன் அனுபவம் பற்றி பானுபிரகாஷ் கூறும்போது, “போர் மூண்டபோது முதலில் சாதாரணமாகத்தான் இருந்தோம். ஆனால் பின்னர் பயம் தொற்றிக்கொண்டது. எப்படியாவது இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என ஒவ்வொரு நாளும் ரயிலுக்காக காத்திருந்தோம். ஆனால் ரயில் கிடைக்கவில்லை. இந்தியா வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் சிறமப்பட்டு வந்த நிலையில் முதல்வர் திரு. மு. க.ஸ்டாலினின் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வருவதற்கு ஆகும் செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
அது எங்களுக்கு மிகவும் தைரியமாகவும், உதவியாக இருந்தது. நாங்கள் இந்தியா வருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 26 ஆம் தேதி அடுத்தடுத்து 2 ரயில்கள் மூலம் எல்லைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினோம், இந்திய தூதரக அதிகாரிகளும் தங்களுக்கு உதவி செய்தார்கள். ரஷ்யா - உக்ரேன் இடையே தற்போது நடந்து வரும் போர் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் மீண்டும் உக்ரைன் நாட்டின் கீவ் பகுதிக்கு சென்று அங்கேயே தான் படிப்பதாக அவர் தெரிவித்தார்.