முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘உங்களில் ஒருவன்' தன் வரலாற்று நூலை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அவர்கள் வெளியிட வந்திருந்தார்கள். அதில் பேசும்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க உரையினை ஆற்றி இருக்கிறார்கள். இந்த உரையைக்கேட்டு உருக்குலைந்து கிடக்கிறது, பா.ஜ.க. கூட்டம்.
நாடாளுமன்றத்தின் மையமண்டபத்தில் நின்று, ‘இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேரூன்றவே முடியாது' என்று சொன்னவர் ராகுல் காந்தி. பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த அவர், ‘நானும் தமிழன்தான்' என்று சொன்னவர் ராகுல் காந்தி. அத்தகைய ராகுல் காந்தி, தமிழ்நிலத்தின் பெருமையை, மூவாயிரம் ஆண்டு வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.
இந்தியாவுக்கே மதச்சார்பின்மையைப் போதிக்கும் மண்தான் தமிழ் மண் என்றும் சொன்னார். இந்தியாவை, மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னார். மாநிலங்கள் சேர்ந்ததுதான் ஒன்றியம் என்றும் சொன்னார். ஒருவிதமான சர்வாதிகாரத் தன்மையுடன் பா.ஜ.க. அரசு ஆட்சி செலுத்தி வரும் நிலையில் ராகுல் காந்தியைப் போன்ற ஒரு அகில இந்தியத் தலைவர், கூட்டாட்சித் தத்துவம் குறித்துப் பேசுவது என்பது மிகமிக முக்கியமானது.
மாநிலக் கட்சிகள் பேசுவதை விட, ஒரு அகில இந்தியக் கட்சி பேசுவது முக்கியமானது. அதுவும் ராகுல் காந்தியைப் போன்ற ஒரு அகில இந்திய பிரபலம் பேசுவது அதனினும் முக்கியமானது. இதனை பா.ஜ.க.வினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நல்லதை உருவாக்கி பெயர் வாங்கத் தெரியாது அவர்களுக்கு. உருக்குலைப்பதன் மூலமாக பேர்பெறுபவர்கள் அவர்கள். பிரதமர் நேரு உருவாக்கியது அனைத்தையும் உருக்குலைத்துக் கொண்டு இருப்பவர்கள் அவர்கள். நேர்மறை அரசியல் அவர்களுக்குத் தெரியாது. எதிர்மறை அரசியலையே எப்போதும் கைக்கொள்வார்கள்.
அவசர நிலைப்பிரகடனத்தையும் ராகுல்காந்தியையும் முடிச்சுப்போட்டு அவசர உடுக்கை அண்ணாமலை கருத்துச் சொல்லி இருக்கிறார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள். எமர்ஜென்சியில், தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்ட காலம் என்று குறிப்பிட்டுள்ளார். திருமதி இந்திரா காந்தி அவர்களே இதைச் செய்தார். அவருடைய பேரன் ராகுல் காந்தி அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்” - என்று பெரிய அரசியல் மேதையைப் போலக் கருத்துத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
முதலமைச்சரின் நூலை வெளியிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும் அண்ணாமலை. அதை விட்டுவிட்டு, அவரை ஏன் அழைத்தீர்கள் என்ற தொனியில் கேள்வி கேட்டுள்ளார். 1975 அவசர நிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியாயப்படுத்தி இருந்தால்தான் தவறு. அவர் அதனைச் செய்யவில்லை. அதனை அவர், இந்த நூலில் விமர்சிக்கவே செய்துள்ளார். இப்படி அவர் எழுதியதை ராகுல் காந்தியும் விமர்சிக்கவில்லை. இது எதையும் தெரிந்து கொள்ளாமல் அவசர உடுக்கை அடித்துள்ளார் அண்ணாமலை.
அவசர நிலைப்பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக, இந்திரா அம்மையார் அவர்களே வருத்தம் தெரிவித்த வரலாறு எல்லாம் அரைகுறைகளுக்குத் தெரியாது. 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திராவால் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரி அவர்களை ஆதரித்தார் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்ட போதும் இந்திராவை ஆதரித்தார் கலைஞர். 1975 அவசரநிலையை கலைஞர் அவர்கள் ஆதரிப்பார்கள் என்று பிரதமர் இந்திரா நினைத்தார். மாறாக, கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் கலைஞர். இதனைத் தொடர்ந்து தி.மு.க. சந்தித்த சோதனைகள் அனைத்தும் அனைவரும் அறிவார்கள். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் ஓராண்டு காலம் அடைக்கப்பட்டார்கள்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கூட்டி ஒரு கூட்டணியை உருவாக்க கலைஞர் அவர்கள் முயற்சித்தார்கள். அதுதான் 1977 ஆம் ஆண்டு ஜனதா அரசாக அமைந்தது. இன்றைய பா.ஜ.க.வின் அன்றைய தலைவர்களும் அதில் இருந்தார்கள். ஆட்சிக்கு வந்த ஜனதாக்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஆட்சியை இழுத்து தங்கள் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு அவர்களது ஆட்சியை அவர்களே கவிழ்த்துக் கொண்டார்கள். இந்தச் சூழலில்தான் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்திரா அம்மையாரை மீண்டும் ஆதரித்தார் கலைஞர் அவர்கள். 1980-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உருவாகியது.
கலைஞரும், இந்திராவும் ஒரே மேடையில் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. அதில் கலைஞர் அவர்கள் பேசும்போது சொன்னார்: “டெல்லியில் கேலிக்கூத்தான அரசு அமைவதை நாங்கள் விரும்பவில்லை. நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்திரா காந்தியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்” என்று பேசினார்.
“நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சியைத் தருக!'' என இந்திராவுக்குப் பட்டம் சூட்டினார். இது அவசர உடுக்கைகளுக்குத் தெரியாது! அடுத்து பேசிய இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், “நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி தவறுகள் நடக்காது'' என பகிரங்கமாகக் கூறினார்.
அவசர நிலையைக் கொண்டுவந்ததற்காக லட்சக்கணக்கான மக்கள் முன்னால் வருத்தம் தெரிவித்தார் இந்திரா அம்மையார். இது அவசர உடுக்கைகளுக்குத் தெரியாது. “கலைஞர் கருணாநிதியை நம்பலாம். அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார். எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார். திரைக்குப் பின்னால் ரகசியமான நடவடிக்கைகளை தி.மு.க எடுத்ததே இல்லை. கலைஞர் கருணாநிதி நண்பராக இருந்தாலும் விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பார்'' என கலைஞருக்கு புகழாரம் சூட்டினார் இந்திரா. இது வரலாறு.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்திரா பிரதமர் ஆனார். இது நடந்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டது. அண்ணாமலை அந்த வரலாறுகள் எதுவும் அறியாமல் ஏதோ கருத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
நேரு காலத்தில் உருவாக்க நினைத்த மனமாற்றம் ராகுல் காந்தி காலத்தில் நடந்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா செய்ய நினைத்த மனமாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டி உள்ளார். எனவே, இந்தப் புத்தகத்தை வெளியிட ராகுல் காந்தியே பொருத்தமானவர்!