தமிழ்நாடு

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது” : மேடையில் கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம்!

சிந்திப்பது, செயல்படுவது, களமாடுவது ஆகியவை மு.க.ஸ்டாலினின் குணம் எனக் கவிப்பேரரசு வைரமுத்து பேசியுள்ளார்.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது” : மேடையில் கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்று வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் - ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நூல் வெளியீட்டுக்கு பின்னர் கவிப்பேரரசு வைரமுத்து விழா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, “இது பெரிய மேடை, அரிய மேடை. இந்தியா புருவம் உயர்ந்து பார்க்கும் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி ஆகிய பெருமக்களால் இந்த மேடை பெருமையுடன் நிற்கிறது.

தமிழ் மொழி எங்களுக்கு கருத்து விளக்க கருவி மட்டுமல்ல மொழி எங்களுக்கு எல்லை; மொழி எங்களுக்கு நாகரீகம்; ஆரியப் படையெடுப்பிற்கு முன் இந்தியா முழுக்க பேசப்பட்ட மொழி தமிழ் என அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிடிவாதத்தில் உன் அப்பனை மிஞ்சிவிடுவாய் என ஸ்டாலினை பாராட்டினார் அண்ணா. அந்தக் கொள்கைப் பிடிப்புதான் மு.க.ஸ்டாலினை உயர்த்தியிருக்கிறது.

"கலைஞருக்கு நெஞ்சுக்கு நீதி போல அவரின் நீட்சியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உங்களில் ஒருவன்; கலைஞர் 6 பாகம் எழுதினார், மு.க.ஸ்டாலின் 7 பாகம் எழுத வேண்டும்.

சிந்திப்பது, செயல்படுவது, களமாடுவது ஆகியவை மு.க.ஸ்டாலினின் குணம். கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டை இந்தியாவே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories