லட்சக்கணக்கில் வரதட்சனை கொடுத்த பின்னும் கல்யாணம் ஆன இரண்டு ஆண்டுகள் கழித்து புது வீடு வாங்கித் தரச்சொல்லி மனைவியை கொடுமை செய்த கணவனை கோவை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
காந்திபுரம் முதலாவது வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (32). சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும் வங்கி ஊழியரான 27 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது.
அப்போது பெண் வீட்டார் சார்பில் 5 லட்ச ரூபாய் ரொக்கமும், 51 சவரன் தங்க நகைகளையும் வரதட்சனையாக கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், திருமணமான சில நாட்களில் பெண்ணுக்கு முகப்பரு வந்திருக்கிறது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்திருக்கிறதாம்.
இந்த சண்டை முற்றிப்போய், என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் புது வீடு வாங்கித் தருமாறு அப்பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தாரும் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள்.
மேலும், அந்த பிச்சைமுத்து பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை காட்டி மிரட்டி அடிக்கவும் செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தை குடும்பத்தாரிடம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
பிச்சைமுத்துவின் தாக்குதலுக்கு ஆளான அப்பெண் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
இதனையடுத்து தன்னை மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் பிச்சைமுத்துவும் அவரது குடும்பத்தினர் மீது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அப்பெண்.
அதன் பேரில் பிச்சைமுத்து, அவரது தந்தை செல்லதுரை, தாய் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் மீது தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.