தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியல் நேற்று மாலை சமய சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு பேசினர்.
அப்போது கூட்டத்தில் தொல் திருமாவளவன் பேசியதாவது, “பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகிறனர். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி பா.ஜ.க ஆதாயம் அடைய துடிக்கிறது.
தமிழ்நாடு அரசும் காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது. எனவேதான் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதெல்லாம் தாண்டி தற்போதைய தேர்தலில், ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளனர்.
தி.மு.க.வின் வாக்கு சதவீதம் என்ன, பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் என்ன? உண்மையில் காங்கிரஸ் கட்சித் தான் தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக உள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதத்தில் மேல் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது கட்சி என்று கூறும் பா.ஜ.க பல இடங்களில் டெப்பாசிட் தொகையை இழந்துள்ளனர். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் வெறும் ஒரு ஓட்டை பா.ஜ.க பெற்றுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான பலம்.
இந்தியாவில் 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்தனர், 400 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் நினைத்திருந்தால் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றி இருக்கலாம், ஆனால், அப்படி செய்யவில்லை. அப்போதெல்லாம் நடைபெறாத மதமாற்றம் இப்போது மத மாற்றம் செய்கிறார்கள் என்பதெல்லாம் அரசியலுக்காக சனாதான கும்பல் செய்யும் சதி வேலை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தகைய கும்பலை நாம் தமிழ் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். முன்பெல்லாம் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்கள். தற்போது பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் தந்தை பெரியார், திருவள்ளுவர் ஆகியோரது சிலைகளை அவமதிக்க தொடங்கியுள்ளனர். மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நம்முடைய தமிழ்மண் என்பதை நாம் உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.