தமிழ்நாடு

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை கம்பி எண்ண வைத்த கயத்தாறு போலிஸ்!

தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை கம்பி எண்ண வைத்த கயத்தாறு போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ தந்தை பெரியாரின் கருத்துகளை அவரைப்போலவே வேடமிட்டு நடித்துக் காட்டியிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் வாயிலாக லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது. இதனையடுத்து அந்த சிறார்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார்கள்.

இப்படி இருக்கையில், கோவில்பட்டி அருகே உள்ள காயத்தாரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு சமூக வலைதளத்தில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையிலும், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவிட்டதால் அவரை கயத்தாறு போலிஸார் கைது செய்துள்ளனர்.

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை கம்பி எண்ண வைத்த கயத்தாறு போலிஸ்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமியின் மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36). கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகளை அடித்து கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.

அவரது பதிவுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு போலிஸாரிடம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து கயத்தாறு போலிஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories