தமிழ்நாடு

”மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த டெல்லியில் மறுக்கப்பட்ட அணிவகுப்பு ஊர்திகள்” -முதலமைச்சர் எடுத்த செல்ஃபி

சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகளை காண மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் திரண்டு வருகின்றன.

”மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த டெல்லியில் மறுக்கப்பட்ட அணிவகுப்பு ஊர்திகள்” -முதலமைச்சர் எடுத்த செல்ஃபி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வலம் வந்தன.

இதனையடுத்து, சென்னை மக்கள் பார்வையிடுவதற்காக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று இடங்களில் இந்த அலங்கார ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், மெரினா கடற்கரை பகுதிக்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார். அப்போது மாணவ, மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் அவர் உரையாடினார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாணவ, மாணவிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, குடியரசு தின அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவ , மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

புத்தகத்தில் மட்டுமே படித்த சுதந்திர போராட்ட வீரர் வீராங்கனைகளின் உருவச்சிலைகளை நேரில் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் நேரில் வந்து தங்களுடன் கலந்துரையாடியது உற்சாகத்தை ஏற்படுத்தியதாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குடியரசு தின அலங்கார ஊர்திகள், நாளை மறுநாள் வரை பொதுமக்களின் பார்வைக்காக மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவச் செல்வங்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்ததோடு, ”குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவும், போட்டோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி முதலமைச்சரின் செயலுக்கு பாராட்டுகள் பெருகி வருகிறது.

banner

Related Stories

Related Stories