சென்னை மாநகர தேர்தன் போது, ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில், 49-வது வார்டு வாக்குச்சாவடி முகாமில், நரேஷ் என்பவர் அத்துமீறி புகுந்ததாக கூறி, விசாரணை எதுவும் இன்றியும், அவரை பேசவிடாமலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் அவரது சட்டையை கழற்றி அவரை அடித்து இழுத்து வந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேஸ்புக்கிலும் வெளிவந்தது. இதற்கு தி.மு.க மற்றும் பல்வேறு தரப்பில் தரப்பில் கண்டனம் எழுந்தது. அ.தி.மு.க-வினரால் தாக்கப்பட்ட நரேஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது புகார் அளித்தார் இதையடுத்து போலிஸார் 8 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், பயங்கரமான ஆயுதத்தால் தாக்குதல், பிறருக்கு தொல்லை கொடுத்தால், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், கலகம் தூண்டுதல், கொடுங்காயம் விளைவித்தல், அத்துமீறி வாக்குச்சாவடிக்கு நுழைதல் மற்றும் அரை நிர்வாணப்படுத்தி அடித்தல் உட்பட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் டிரைவர் ஜெகநாதன் அடையாளம் தெரியாத 10 பேர்கள் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்தன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் தாக்குதலுக்குள்ளான தி.மு.க-வினரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்த்து ஆறுதல் கூறினார். புது வண்ணாரப்பேட்டையில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் கார் கண்ணாடியை உடைத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலிமுருகன் கண்ணன் உட்பட மற்றும் 3 பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.