தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்தனர்.
இதற்கிடையே ஆங்காங்கே, அ.தி.மு.கவினர் குளறுபடிகளை ஏற்படுத்த முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டி ஒருவரை அ.தி.மு.கவினர் வாக்களிக்க தூக்கிச் சென்ற நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் நகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி லட்சுமி அம்மாள் (75). இவர் உடல்நலக் குறைவு காரணமாக நடமாட முடியாமல் வீட்டிலேயே படுத்துக் கிடந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செய்வதற்காக அ.தி.மு.கவினர், மூதாட்டியின் உயிரைப் பணயம் வைத்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து சுயநினைவில்லாத நிலையில் உறவினர் உதவுயுடன் வாக்களிக்கச் செய்தனர்.
உயிருக்குப் போராடும் நிலையில் சுயநினைவின்றிக் கிடந்த மூதாட்டியை தூக்கி வந்து அ.தி.மு.கவினர் வாக்களிக்கச் செய்த நிலையில், அந்த மூதாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தேர்தலில் ஒரு வாக்குக்காக அ.தி.மு.கவினர் அவரை பாடாய்ப்படுத்தி உயிர்போக காரணமாக இருந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.