நாளை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
* தமிழகம் முழுவதும் 30,735 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளன.
* சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் போலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* கோவைக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக நாகராஜன் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
* வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* 268 வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, வெப்-ஸ்ட்ரீம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது.
* சென்னையில் மூன்று பேர் உள்பட 38 மாவட்டங்களில் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* கோவையில் தங்கியிருந்த வெளியூர்காரர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
* நாளை மக்கள் அச்சமின்றி வாக்களிக்கச் செல்லலாம். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* இதுவரை சுமார் 11.89 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுப்பொருள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* கொரோனா நோயாளிகள் சான்றிதழைக் காட்டி மாலை 5-6 மணி வரையில் வாக்களிக்கலாம்.
* தற்போதுவரை 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
* 295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.