கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த ஃபைசு என்பவர், அண்ணா சிலை அருகே காலணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் காலணி வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது 1500 ரூபாய் மதிப்பிலான காலணியை வாங்கிவிட்டுச் சென்ற சில மணி நேரங்களில் மீண்டும் கடைக்கு வந்து, காலணி வேண்டாம் எனக் கூறி, பணத்தை திரும்பத் தரும்படி, ஃபைசுவிடம் லோகேஷ் கேட்டுள்ளார்.
அப்போது வேறு காலணியை மாற்றி மட்டுமே கொடுக்கமுடியும், பணம் தரமுடியாது என ஃபைசு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கடையில் இருந்த ஃபைசுவின் நண்பர்கள் லோகேஷைத் தாக்கியுள்ளனர்.
இதில் அவர் காயமடைந்த நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து போலிஸார் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கடையை திறக்க வந்த ஃபைசுவை அரிவாளால் லோகேஷ் வெட்டியுள்ளார். இதில் தப்பியோடிய ஃபைசுவை துரத்திச்சென்று வெடிவிட்டு, அங்கிருந்து லோகேஷ் தப்பி ஓடியுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் இருந்த ஃபைசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே போலிஸார் வழக்குப் பதிவு செய்து லோகேஷை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.