சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை உயிரினமான 2 அணில், குரங்குகள் கடந்த 8ம் தேதி காணாமல் போனதாக பூங்கா ஊழியர்கள் வனச்சரகர் வாசு என்பவரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வனச்சரகர் அணில், குரங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டினை பார்த்த போது கம்பிகள் நறுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 8ம் தேதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பூங்காவின் ஒப்பந்த ஊழியரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சத்தியவேல் (34) என்பவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது தனது நணபர் ஜானகிராமன் (எ) ஜான் (21) என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி திருடி விற்பனை செய்ய முடிவு செய்து கடந்த 7ம் தேதி ஜான் பூங்காவிற்குள் பார்வையாளர் போல் வந்து ஊழியர்கள் அனைவரும் சென்ற பிறகு அங்கேயே பதுங்கி இருந்து கட்டர் உபகரணத்தை பயன்படுத்தி கூண்டினை நறுக்கி அணில், குரங்குகளை திருடி பையில் போட்டுக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார்.
அணில் குரங்குகளை விற்பனை செய்வதற்காக லோகநாதன் (எ) சூர்யாவிடம் கொடுத்துள்ளார். சூர்யா, வினோத்(29), என்பவருக்கு 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து இரண்டு ஆண் அணில், குரங்குகளை மீட்டு பூங்காவில் விட்டனர்.
பின்னர் பூங்கா ஊழியர் உட்பட மூவரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.