கர்நாடகாவில், சிறுபான்மையின பெண்களுக்கு எதிரான உடை விவகாரங்களை இந்துத்வா கும்பல் கையில் எடுத்து மோதல்களை உண்டாக்கும் வேலையைச் செய்து வருகிறது. கடந்த மாதம் அங்குள்ள மசூதிகளில் ஏறி, காவிக் கொடி ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி - கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனத் தெரிவித்து இந்துத்வா கும்பல் எதிர்ப்பை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கர்நாடக மாநிலம் குண்டப்பூரில் அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. அதனை மீறி வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வாசலில் தடுத்து நிறுத்தியால், அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், இந்துத்வா கும்பல்களின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஆடைகளை மாணவர்கள் அணிந்துவரக்கூடாது என்று அறிவித்தது.
இதுதொடர்பாக மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரலாம் ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டுவார்கள் என்றும் கூறியது. இந்நிலையில் தொடர் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நிலையில் மீண்டும் 11, 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கு புதன் கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் உடை மீதான தாக்குதல் பிரச்சனை எழுந்ததில் இருந்தே இயக்குநர் நவீன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மூடர்கூடம் படத்தின் வசனத்தைக் குறிப்பிட்ட ட்விட்டரில் நவீன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த ட்வீட்டரில், "மதத்துக்காக வருத்தப்படற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க்க வாழல சக இந்தியர்களே. நாம வருத்தப்படறதுக்கு நெறைய பிரச்சனயிருக்கு. நம்மையும் சக மனுசனா சமமா நடத்தி, நமக்கான மறுக்கப்பட்ட வாய்ப்புகள் கெடச்சு, மூனு வேல சோறு, கல்வி, சமத்துவம் அடஞ்ச பெறகு கடவுளுக்காக போராடலாம்" என தெரிவித்துள்ளார்.