சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவர் நேற்று மாலை நடந்த சண்டையில் அடித்துக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குமரன் நகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கின.
விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் இரண்டு நபர்கள் கோகுலைக் கட்டையால் அடிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் தகராறு நடந்த பாரில் பணியாற்றிய ராமநாதபுரத்தை சேர்ந்த செபாஸ்டியன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கோபி எனத் தெரியவந்தது. அவர்களிடன் நடத்திய தொடர் விசாரணையில், கோகுல் நேற்று முன் தினம் மதுபோதையில் டாஸ்மாக் பாருக்கு வெளியே வந்து படுத்துக்கொண்டதாகவும், நேற்று காலையில் இருந்தே இலவசமாக மதுகேட்டு ரகளை செய்தாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த ரகளையின் போது பார் ஊழியர்கள் அவரை அப்புறப்படுத்தும் போது ஆத்திரமடைந்த கோகுல், ஊழியர்களை தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்குதல் நடத்த முயன்ற கோகுலை தற்காப்புக்காக தான் தாக்கியதாக செபாஸ்டியன் மற்றும் கோபி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலிஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.