“நுழைவுத் தேர்வோ, நீட் தேர்வோ இன்றி 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள் உலகெங்கும் பிரபல டாக்டர்களாகப் பரிமளிக்கவில்லையா?” என விடுதலை (09.02.2022) நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்தச் செய்தி வருமாறு :
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. எடுத்துக்காட்டாக தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது. இது பற்றிய புள்ளி விவரம் இதோ:
பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்/தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 - மருத்துவக் கல்வி இயக்ககம்
அனுப்புநர்: பொதுத் தகவல் அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம், கீழ்ப்பாக்கம், சென்னை -10.
பெறுநர்: R.அப்பாவுரத்தினம் B.A.,B.L., வழக்கறிஞர், எண்.23, வழக்கறிஞர் வளாகம், மாவட்ட நீதிமன்ற கட்டிடம், திருநெல்வேலி-2
ந.க.எண். 69553/தேகுபி/தஅஉச/2019-2 நாள். 01.10.2019
அய்யா,
பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் மூலம் கோரிய விவரங்களுக்கு தகவல்கள் வழங்குவது தொடர்பாக,
பார்வை: 1. இவ்வலுவலக ஓ.மு.எண். 62133/தேகுபி11)/2019, நாள். 22.08.2019.
2. R. அப்பாவுரத்தினம் , வழக்கறிஞர், எண்.23, வழக்கறிஞர் வளாகம், மாவட்ட நீதிமன்ற கட்டிடம், திருநெல்வேலி, அவர்களின் 28.08.2019 நாளிட்ட விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் 30.08.2019.
1. பார்வையில் காணும் மனுவில், மனுதாரர் கோரியுள்ள தகவல்களுக்கு கீழ்கண்டவாறு பதில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
1. 2015-2016ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? - 456
2. 2015-2016ஆம் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? - 54
3.2016-2017ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? -438
4. 2016-2017ஆம் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? -99
5. 2017-2018ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? -40
6. 2017-2018ஆம் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? - 12
7. 2018-2019ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? - 88
8. 2018-2019ஆம் கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரி களில் சேர்ந்த தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்? - 18
2. பொதுத் தகவல் அலுவலர் வழங்கும் பதிலுக்கு எதிராக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின் அதனை முதல் மேல் முறையீடு அலுவலருக்கு, பொதுத் தகவல் அலுவலரின் பதில் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இந்தப் புள்ளி விவரம் காட்டும் உண்மை என்ன? தமிழ் வழியில் 12ஆம் வகுப்பு வரை படித்த இருபால் மாணவர்களும் மிகப் பெரிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர்களாக சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
'நீட்' இல்லாமல் தமிழ் வழியில் படித்து மருத்துவர்கள் ஆனவர்கள் எல்லாம் தரம் குறைவானவர்களா?
அதற்கான புள்ளி விவரங்கள் இருந்தால் யாரேனும் சொல்ல முன் வரட்டுமே பார்க்கலாம் என்று கேட்டவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் இன்னொரு கேள்வியும் மிக முக்கியமானது. 'தகுதி பெறுவதற்காகத்தானே கல்லூரி - கல்லூரியில் சேர்வதற்கே தகுதி என்றால் என்ன நியாயம் என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியவரும் அவரே!
நுழைவுத் தேர்வோ, நீட் தேர்வோ இன்றி 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள் உலகெங்கும் பிரபல டாக்டர்களாகப் பரிமளிக்கவில்லையா?
இன்னொரு கேள்வியையும் எழுப்பினார் பெரியார். தகுதி - திறமை அடையாளம் மார்க்கு தானா? என்று கேட்டாரே - கல்வியாளர்கள் பலரும் இதனை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மனப்பாடம் கல்வியின் அறிவுக்கு அளவுகோலா? மந்திரங்களை மனப்பாடம் செய்து செய்து பழக்கப்பட்ட பார்ப்பனர்களின் ஜீனிலேயே அந்த மனப்பாட தகுதி வந்து விடுகிறது. அந்தக் காரணத்தால்தான் தகுதி திறமையை மானப்பாட அடிப்படையில் கல்வி ஏற்பாட்டைச் செய்துள்ளனர் என்ற அறிவியல் சிந்தனை அடிப்படையில் கூறி இருப்பவர் தந்தை பெரியாரே!
எவ்வளவு காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை? எவ்வளவுக் காலத்திற்குக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் தூங்கிக் கிடப்பார்கள்?
அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர்தான் தந்தை பெரியார் - விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான் சுயமரியாதை இயக்கம் - திராவிடர் இயக்கம். அதன் எதிரொலிதான் நீட்டை ஒழிக்கும் முயற்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மும்முரமாக முதற்படியில் நின்று வாளைச் சுழற்றுகிறார்.
தொடக்கத்தில் தடைகள் வரலாம். அந்தத் தடைகளைக் கடந்துதான் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு! அந்தப் பெரும் தடைகளை உடைத்துதான் மண்டல குழுப் பரிந்துரைகளின் அமலாக்கம். அதற்காகத் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42, போராட்டங்கள் 16.
நீட்டை ஒழிக்க அதையும் கடந்து போராடத் தயார்! தயார்!!
திராவிட நல்லாட்சி அமைந்துள்ளது, வெற்றி நமதே!