நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அதனை 142 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனையடுத்து உடனடியாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
இந்நிலையில் தி இந்து நாளிதழில், ஏன் நீட் தேர்வு ஏற்கத்தக்கதல்ல என்றும், நீட் விலக்கு மசோதாவின் நோக்கம் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
அதனை தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தர்.
அதில், “எமது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் சிறப்பு விலக்கு கோருவதற்கானதன்று. பாகுபாடு காட்டும், பயிற்சி நிறுவனங்களால் தூக்கிப்பிடிக்கப்படும் நீட் தேர்வால் துரத்தியடிக்கப்படும் விளிம்புநிலை மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கானச் சமமான போட்டிக் களத்தை உறுதி செய்வதே ஆகும். இந்தியாவில் கூட்டாட்சியியலை வலுப்படுத்தப் போராடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.