அண்ணா நினைவு தினமான பிப்ரவரி மூன்றாம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஜவஹர்லால் நேருவின் நான்காம் தலைமுறை வாரிசுமான ராகுல் காந்தி மிக முக்கியமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். இது மாநிலங்களின் தனித்துவத்தையும், சுயாட்சி உரிமைகளையும் வலியுறுத்தி அறுபதாண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளை நினைவுபடுத்தியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெகு பொறுத்தமாக அமைந்தது. ராகுல் காந்தியும் தமிழ்நாட்டை, குறிப்பாக தன் பேச்சில் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ராகுல் காந்தி அவர்களின் உரை உணர்வுபூர்வமாக அமைந்தது. மிகவும் தீவிரமாக அவர் பாரதீய ஜனதா அரசு நாட்டை வழிநடத்திச் செல்லும் போக்கைக் கண்டித்துப் பேசினார். அது ஓர் எதிர்க்கட்சி தலைவரின் வழக்கமான குறை கூறும் பேச்சாக அமையவில்லை. ஓர் அரசியல் தலைவர் எப்படி தொலைநோக்கு பார்வையுடன் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பேச வேண்டுமோ, அப்படி ஒரு தீர்க்கமான பார்வையுடன் பேசினார் என்பதுதான் முக்கியமானது. அவர் பேச்சிலிருந்து மூன்று அம்சங்களை முக்கியமாக கருத்தில்கொண்டு நாம் விவாதிக்க வேண்டும். ஒன்று, நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது; இரண்டு, மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, கூட்டாட்சி தத்துவம் பலவீனமடைவது; மூன்று, அயலுறவுகளில் சூழும் பகை மேகம். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புடையவை. எப்படி எனக் காண்போம்.
இரண்டு இந்தியாக்கள்
ராகுல் காந்தி மிக முக்கியமான பிரச்சினையிலிருந்துதான் தொடங்கினார். இன்று இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன என்றார். ஒன்று, பெருந்தனவந்தர்களின், அதிகாரம் மிக்கவர்களின், செல்வந்தர்களின் இந்தியா. மற்றொன்று, ஏழை எளிய மக்களின் இந்தியா. இந்த இரண்டு இந்தியாவுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொன்னார். மோடியின் பாஜக அரசு ஏழைகளிடமிருந்து திருடி அதானி, அம்பானிகளுக்குக் கொடுக்கிறது என்று நேரடியாக குற்றம் சாட்டினார். இது மிக முக்கியமான பிரச்சினையாகும்.
உலகம் முழுவதுமே மன்னர்களின் ஆட்சியும், நிலப்பிரபுத்துவ சமூகமும் மாறுதலுக்குள்ளாகி, அனைத்து மக்களும் தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் புதிய மக்களாட்சி குடியரசுகள் தோன்றியபோது, அதன் உட்கிடக்கையாக அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படும், யாரும் அவரவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தொழில் புரிந்து வாழ்வில் வளம் பெறலாம் என்ற ஒரு கருத்தாக்கம் வலுப்பெற்றது. அதைச் செயல்படுத்த மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளே ஆட்சி செய்வதும், அத்தகைய அரசு நாட்டின் இயற்கை வளங்களை பொதுவுடைமையாக அரசின் சொத்தாகக் கையாண்டு அதில் கிடைக்கும் வருவாய், தனிச்சொத்து உடையவர்களுக்கு வரி விதித்து அதில் கிடைக்கும் வருவாய், வருமானம், தொழில்களில் பெரும் லாபம் ஆகியவற்றுக்கும் வரி விதித்து அதில் கிடைக்கும் வருவாய் ஆகிய வருமானங்களின் மூலம் பொது மக்களுக்கான கல்வி, சுகாதார வசதிகள், ஆதாரக் கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி தர வேண்டும் என்ற செயல்முறை ஏற்பட்டது.
மற்றொருபுறம் தனிச் சொத்தே இருக்கக் கூடாது, எல்லா சொத்துகளும், உற்பத்தி சாதனங்களும் பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற பொதுவுடைமை “கம்யூனிஸ” சித்தாந்தமும் உருவானது. அப்படி முழுமையாக கம்யூனிஸமாகாவிட்டாலும், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்கள் சோஷலிஸம் எனப்படும் சமூகமய நோக்கைக் கருத்தில்கொண்டு வறுமையை ஒழித்து, எல்லோரும் எல்லாவும் பெற வேண்டும் என்ற நோக்கில் நாட்டில் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றது. இதை இந்தியாவின் முதல் பிரதமரும், தரிசனமிக்க தலைவருமான நேரு “ஜனநாயக சோஷலிஸம்” என்று அழைத்தார். பொதுத் துறை உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அறிஞர் அண்ணா அப்போதே வட இந்திய பார்ஸி - பனியா மூலதனக்குவிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தார். அவருடைய பணத்தோட்டம் என்ற நூலில் எவ்வாறு மத்திய அரசிடம் குவிந்திருக்கும் அதிகாரம் வட இந்திய முதலாளிகளுக்கு சாதகமாக இயங்கும் என்பதை சுட்டிக்காட்டினார். ஆங்கில சோஷலிஸ சிந்தனையாளர் ஹெரால்டு லாஸ்கியின் சிந்தனைகளைச் சுட்டிக்காட்டி, நேருவின் சோஷலிஸ நடைமுறைகளின் போதாமையை விமர்சித்தார். அவ்வகையில் இன்றைய சூழலை அன்றே உணர்ந்து சொன்னவர் அண்ணா என்பதையும் நாம் நினைவு கொள்ளலாம்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பொதுவுடைமையை முயற்சி செய்த நாடுகள் பலவிதங்களில் முதலீட்டிய பொருளாதார நடைமுறைகளுக்குத் திரும்பின. சோஷலிஸ கொள்கைகள், மக்கள் நலன் அரசுகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கத்தான் செய்தது. தாமஸ் பிக்கெட்டி என்பார் சமீபத்தில் எழுதியுள்ள “முதலீடும், கருத்தியலும்” (Capital and Ideology) என்ற நூலில் எப்படி உலகின் பல்வேறு நாடுகளிலும் பத்து சதவிகித மக்களிடம் பெருமளவு சொத்துகள் குவிந்துள்ளன என்பதை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். இன்னும் சொன்னால் பல்வேறு நாடுகளில் ஒரு சதவிகித மக்களிடமே கணிசமான சொத்துகள் குவிந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் முயற்சி செய்யப்பட்ட எல்லா சுதந்திரவாத, புரட்சிவாத நடைமுறைகளும் இறுதியில் சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வைக் களையவில்லை என்பதுடன், இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கவும் செய்கிறது என்பதையே பிக்கெட்டி சுட்டிக்காட்டுகிறார்.
இந்தப் போக்கினை ஒட்டியே பாரதீய ஜனதா கட்சி பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அரசினை வெளிப்படையாக நடத்துகிறது. அதனால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் தங்களை எதிர்க்காமல் இருக்க அவர்களை மத அடையாளம் சார்ந்து பிளவுபடுத்தியும், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சிறுபான்மை மதங்களை எதிரிகளாக்கி பெரும்பான்மை இந்துக்களை மத அடையாளம் சார்ந்து திரட்டியும், பாகிஸ்தான் என்ற எதிரி நாட்டைக் காட்டி அச்சுறுத்தியும் வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறது.
ஒற்றை தேசிய அரசா, மாநில அரசுகளின் ஒன்றியமா?
ஒற்றை தேசிய அரசிடம் அதிகாரம் குவிவதற்கும், கார்ப்பரேட் பெருமுதலீட்டிய வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஏனெனில் இந்தப் பெரு நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை தேசிய வங்கிகளே தர முடியும். வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வது என்ற பெயரில் அவர்களது வர்க்க நலன்களை, தொழில் நலன்களைக் காக்க முடியும். வரிச் சலுகைகளை வாரி வழங்க முடியும். ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை அவர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்க முடியும்.
மாநில அரசுகளோ அந்தந்த பகுதிகளில் இயங்கும் சிறு, குறு தொழில்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஆளும்கட்சிகள் தங்களுக்கு வாக்களிக்கும் எளிய மக்களுக்கு நல்வாழ்வுக்கான ஆதார தேவைகளை வழங்க வேண்டியுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி, கல்வி, சுகாதாரம், உணவு, வசிப்பிடம், குடிநீர் என வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகள் என்பவை இயல்பாகவே மக்களாட்சியின் வேர்மட்ட இயக்கத்தில் சோஷலிஸ செயல்முறையை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
பெருமுதலீட்டிய உற்பத்தி, வணிக வலைப்பின்னலுடன் இணைந்த மேல்தட்டு குடிமக்கள் தேசிய அரசின் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்தியாவில் இவர்கள் ஆங்கிலம் பயின்ற ஆதிக்க ஜாதி சக்திகளாகவும் இருப்பார்கள். மாநில அரசியலில் ஈடுபாடு காட்டுபவர்கள், மாநில அரசின் அதிகாரத்தைச் சார்ந்திருப்பவர்கள் சிறு, குறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், உதிரிப் பாட்டாளிகள் தாய்மொழி சமூகமாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பார்கள். இந்த முக்கியமான வேறுபாட்டை சர்வதேச புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி தன்னுடைய சமீபத்திய நூலான “தேசியத்தின் உண்மைகளும், பொய்களும்: சார்வாகர் கூறியபடி” (Truth and Lies of Nationalism as told by Carvak) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
அதனால் ஒன்றிய அரசாங்கத்துக்கும், மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு என்பது வெறும் மொழி, இன அடையாளம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. அது அடிப்படையில் பெரு முதலீட்டிய நலன்களையே மையப்படுத்தும் முதலீட்டிய பொருளாதாரத்துக்கும், பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வை சாத்தியமாக்க விரும்பும் சோஷலிஸ சிந்தனைக்கும் உள்ள முரண்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டது. அதன் ஓர் இன்றியமையாத அம்சம்தான் இட ஒதுக்கீடு, சமூக நீதி கோட்பாடுகள்.
திராவிட இயக்கம் சாமானியர்களின் இயக்கமாக உருவானது. திராவிட முன்னேற்றக் கழகம் சாமானியர்களின் ஆட்சியையே லட்சியமாகக் கொண்டது. அதன் கொள்கைகள் செயல்முறைகள் எல்லாம், சமீபத்தில் சமூக நீதி கூட்டமைப்புக்கான அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியபடி “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற சோஷலிஸ கருத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதனால் அதற்கு மாநில உரிமைகள் என்பவை முக்கியமானவை. இதன் வெளிப்பாடாகத்தான் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் (National Eligibility cum Entrance Test) என்பதை தமிழ்நாட்டு மக்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். இது மாநில இறையாண்மை சார்ந்த கோரிக்கையாக இன்று வடிவெடுத்துள்ளது.
ராகுல் காந்தி இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ்நாட்டின் தனித்துவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அத்துடன் நில்லாமல் இந்திய வரலாறு அனைத்திலும் எந்த வட இந்தியப் பேரரசும் தமிழகத்தை ஆண்டதில்லை, ஏன் இன்றைய இந்தியாவை எந்த பேரரசும் முழுமையாக ஆண்டதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அண்ணாவும் தன் ஆரிய மாயை நூலில் இந்த வரலாற்று அம்சத்தை விளக்கி கூறியுள்ளார். இப்படி வரலாற்றை நினைவுகூர்வது என்பது வெறும் பண்டைய பெருமை பேசுவது என்பதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயின்று வந்த பண்பாட்டு வித்தியாசங்கள் நவீன காலத்திலும் உருவாக்கும் விழுமியங்கள், அரசியல் லட்சியங்கள் மாறுபட்டு இருக்கும் சாத்தியத்தைப் புரிந்துகொள்வதுதான். எனவே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே அளவுகோல், ஒரே வாழ்க்கை முறை என்பது ஓர் ஆதிக்க வெறி பிடித்த பேரரசின் கனவாக இருக்க முடியுமே தவிர ஒரு மக்கள் நல அரசின் லட்சியமாக இருக்க முடியாது. அதனால்தான் இந்தியா மன்னராட்சி நாடல்ல என்று கூறினார் ராகுல் காந்தி.
இந்திய மாநிலங்களிடையே கணிசமான அதிகாரப் பரவல் கொண்ட தளர்வான கூட்டாட்சி குடியரசாகத்தான் இந்திய அரசாங்கம் வலிமை பெற்று விளங்க முடியும். மாநிலங்களைப் பலவீனப்படுத்தினால் ஒன்றியம் பலமடையாது; மாறாக, பலவீனமடையும். உடலின் ஓர் அங்கம் பலவீனமடைந்தால், அந்த உயிரி முழுவதுமாகத்தான் பலவீனமடையும். உண்மையான தேசம் என்பது பல்வேறு மக்கள் தொகுதிகளின் கூட்டமைப்பு என்று விளக்குகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டத்தான் அயலுறவு சூழல் குறித்தும் பேசினார் ராகுல் காந்தி.
ஏன் வளர்கிறது எல்லைக்கப்பால் பகைமை?
ராகுல் காந்தியின் பேச்சின் மூன்றாவது பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நெருங்கிய உறவினை வளர்த்துக்கொள்கின்றன என்று சுட்டிக்காட்டி எச்சரித்தார். இதற்குப் பதிலாக வெகுகாலமாகவே அந்த நாடுகளுக்குள் நிலவும் உறவு, பல்வேறு ஒப்பந்தங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சுட்டிக்காட்டுகிறார். பிரச்சினை பாகிஸ்தானும், சீனாவும் நட்பாக இருக்கக் கூடாது என்பதல்ல. அந்த உறவு இந்தியாவுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது என்பதுதான்.
இன்றைய சர்வதேச சூழலில் நாடுகளுக்கிடையே பகைமை என்பது காரணமில்லாமல் உருவாவதில்லை. வெறும் நாடு பிடிக்கும் ஆசையில் எந்த நாடும் போர்தொடுத்துவிட முடியாது. பெரும்பாலும் எப்படி விரோதம் அதிகரிக்கிறது என்றால் ஒரு நாடு அதன் ஒரு பகுதியின் மீது வல்லாதிக்கம் செலுத்தும்போது, குடியுரிமையை மறுக்கும்போது, அரசு வன்முறையும், மனித உரிமை மீறல்கள் பெருகும்போது அண்டை நாடுகள் அதன் காரணமாக விரோதம் கொள்வது என்பது அதிகரிக்கும்.
இந்திய அரசு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை திடீரென நீக்கி, அதனை மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகப் பிரித்ததும், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்ததும், கிட்டத்தட்ட ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியதும் சீனாவும், பாகிஸ்தானும் நெருங்குவதற்கான நியாயப்பாட்டினை சர்வதேச அரங்கில் உருவாக்கின. காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவதும், அதற்கு இந்தியக் குடியரசு வழங்கியிருந்த தனி உரிமைகளை மீண்டும் அமலாக்குவதும், அங்கே மக்களாட்சி தடையின்றி நடைபெற உதவுவதும் நீதியின் பாதை மட்டுமல்ல, அதுவே தேசத்தின் பாதுகாப்புக்கும் வலு சேர்ப்பதாக இருக்கும். உள் நாட்டில் மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட்டு, ஒத்துழைப்புமிக்க கூட்டாட்சியாக ஒன்றிய அரசு விளங்கினால்தான் அதன் தேசியப் பாதுகாப்பும் இயல்பாகவே அதிகரிக்கும் என்பதை விளங்கிக்கொள்வது கடினமல்ல. எதேச்சதிகாரமும், சர்வாதிகாரமும், பாசிச கனவுகளும் எந்த அரசியல் பிரச்சினையையும் என்றும் தீர்த்து வைத்ததில்லை என்பதையே இந்திய வரலாறும், உலக வரலாறும் நமக்கு உணர்த்துகின்றன.
அன்று அண்ணா இவற்றையெல்லாம் பண்டிதர் நேருவின் அரசுக்கு எடுத்துச் சொன்னார். இன்று நேருவின் வழித்தோன்றல் ராகுல் காந்தி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு எடுத்துச் சொல்கிறார். இதுவே காலத்துக்கேற்ற வளர்ச்சி; முற்போக்கு சிந்தனை. ராகுல் காந்தியின் தொலைநோக்கு அரசியலுக்குத் தமிழ்நாட்டு மக்களின் பாராட்டுகள் என்றும் உண்டு.
- ராஜன் குறை கிருஷ்ணன் (பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி)
நன்றி : மின்னம்பலம்