தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் 5 மாத குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் : தாயைபோல பராமரித்த பெண் போலிஸ் - நடந்தது என்ன?

சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்தில் பெண்ணிடம் 5 மாத ஆண் குழந்தையை கொடுத்து விட்டு, நடுவழியில் வாலிபர் இறங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பேருந்தில் 5 மாத குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் : தாயைபோல பராமரித்த பெண் போலிஸ் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 50). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி. இந்த தம்பதி புதுச்சேரி கோவிந்தசாலையில் நடைபெறும் உறவினர் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது கணவருடன் இன்று சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நீலாங்கரையை அடுத்த அக்கரை வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் 5 மாத ஆண் குழந்தையுடன் பேருந்தில்ல் ஏறினார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த சரஸ்வதியிடம் அவர் குழந்தையை வைத்திருக்குமாறு கொடுத்தார்.

பச்சிளம் குழந்தை என்பதால் சரஸ்வதியும் வாங்கி வைத்து இருந்தார். பேருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அவரது மடியிலேயே குழந்தை தூங்கிவிட்டது. குழந்தையை கொடுத்த நபர் பேருந்தின் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்தார். இதற்கிடையே பேருந்து மரக்காணத்தை தாண்டி வந்தபோது குழந்தை சிறுநீர் கழித்ததால், அதை துடைத்து விட்டு குழந்தையை கொடுத்த நபரை சரஸ்வதி தேடினார். அப்போது அந்த நபர் மாயமானது தெரிந்து சரஸ்வதியும், பேருந்தில் வந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையை கொடுத்த நபர் குறித்து பேருந்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரித்த போது அந்த நபர் நடுவழியில் கல்பாக்கத்திலேயே இறங்கி விட்டதாக சக பயணிகள் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சரஸ்வதி திகைத்தார். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்த ஆலோசனையின்படி குழந்தையை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேருந்தை நிறுத்தி போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். ஆனால் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்தது. மகளிர் போலிஸார் தாய்மை உணர்வோடு அந்த குழந்தையை வெந்நீரால் குளிப்பாட்டி, பால் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அந்த குழந்தை பராமரிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேருந்தில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு வழியில் இறங்கிச் சென்றவர் யார்? என்பது குறித்து கோட்டக்குப்பம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை கடத்தி வந்து அவர் விட்டுச் சென்றாரா? அல்லது உண்மையிலேயே குழந்தை யாருடையது? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories