நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது. இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி,.க்கள் நீட் தேர்வு விலக்கு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றில் மாநிலத்தின் உரிமைக்காக அழுத்தமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி.,க்கள் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையில் எங்களின் பங்கைக் கேட்பதற்குகூட கர்நாடகா எம்.பி.க்கள் பயப்படுகிறார்கள். நமது கோரிக்கைகளுக்கு அண்டை மாநில அரசியல் கட்சி தலைவர்களை நம்பியிருப்பது வருத்தமளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்தப் பதிவை பார்த்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தென்னிந்தியாவிற்காகவும் சேர்ந்தே நாங்கள் போராடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.எம்.அப்துல்லா வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “சகோதரி நாங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. தென்னிந்தியாவின் உரிமைக்காகவும் சேர்ந்தே போராடுகிறோம். நாம் அனைவரும் திராவிடர்களாக இருப்பதால் எங்களால் உங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்காகவும் போராடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.களின் செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.