சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினித். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் லைக் ஃபாலோவிற்காக ஆசைப்பட்டு கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் வினித் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலிஸார் வினித்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வினித்திடம் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீது குற்றப்பின்னணி ஏதும் இல்லாமல் இருந்ததும், சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமானோர் தன்னை பின்தொடர வேண்டும் என்றும் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்றும் இது போன்ற ரீல்ஸ் வீடியோவை தான் பதிவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலிஸார் வினித்தை எச்சரித்து இதுபோன்று வீடியோக்களை இனி சமூக வலைதளங்களில் பதிவு செய்ய மாட்டேன் என கடிதம் எழுதி வாங்கி வைத்துள்ளனர்.
மேலும் வினித்தின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட வன்முறையை தூண்டக்கூடிய வகையில் உள்ள அனைத்து வீடியோக்களையும் காவல்துறையினர் நீக்கியுள்ளனர்.
அதேபோல் ஆயுதத்துடன் வீடியோ பதிவிட்ட வினித்குமார் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறை தனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறி வினோத்குமார் வெளியிட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதனிடையே ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.