சென்னை சவுகார்பேட்டை ஆச்சர் அப்பன் தெரு பகுதியில் இயங்கி வரக்கூடிய தனியாருக்கு சொந்தமான குடோனில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை மண்டல நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ரசாயனம் கலந்த 1500 கிலோ எடை கொண்ட அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடோனில் உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் தற்பொழுது தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள உற்பத்தி கிடங்கிற்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின் போது சுமார் 350 கிலோ வண்ணசாயங்கள் கலந்த பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், அப்பளங்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்ததையும்,பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய “சென்னை மண்டல நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார், பான் மசாலா, குட்கா பொருட்களையும் இரசாயன சாயங்கள் சேர்க்கப்பட்ட அப்பளங்களையும் மக்கள் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்கட்டமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.