கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கரிவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் அருகே கடந்த ஜனவரி 25 அன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தது மேல்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (50) என தெரிய வந்திருக்கிறது.
சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர் சேத்தியாத்தொப்பு போலிஸார். முன்னதாக உயிரிழந்த வேல்முருகனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், வேல்முருகனை அடித்து தாக்கியதன் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான மகாலட்சுமி (40) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் பிடிபட்டிருக்கிறார்கள்.
இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவலால் போலிஸாரே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதன்படி, “திருமணமான எனக்கும் மேல்வளையமாதேவியைச் சேர்ந்த வேல்முருகனும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பழகி வந்தோம். இருப்பினும் கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனுடனும் பழக்கம் ஏற்பட்டது.
ராமச்சந்திரனுடன் பேசுவது வேல்முருகனுக்கு பிடிக்காததால் என்னை கண்டித்தார். ஆனால் கடந்த 24ம் தேதி இரவு அன்று ராமச்சந்திரனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் வந்த வேல்முருகன் அவருடன் பேசக் கூடாது என கண்டித்தார்.
இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தன்னுடன் உறவுகொள்ளுமாறு வேல்முருகன் என்னை கட்டாயப்படுத்தினார். மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் மேலும் நீடித்தது. இதில் ஆத்திரத்தில் அருகே இருந்த கட்டையால் வேல்முருகனை தாக்கினேன்.
இதனால் கீழே விழுந்தார் வேல்முருகன். போதையில் மயங்கியிருப்பார் என எண்ணி முதலில் இருந்துவிட்டேன். ஆனால் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பேச்சு மூச்சு ஏதும் இல்லாததால் உயிரிழந்தது புரிந்தது. பின்னர் ராமச்சந்திரனை அழைத்து ஆலோசித்து வேல்முருகனின் உடலை என் கணவர் வருவதற்குள் ஊராட்சி பள்ளி அருகே போட்டுவிட்டோம்.” என மகாலட்சுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து மகாலட்சுமியையும், ராமச்சந்திரனையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.