அன்னூர் அருகே டூவீலரில் சென்றபோது பின் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47). டிராக்டர் டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (42). இவர்களது மகள் தர்ஷனா (10) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வசந்திக்கும், தர்ஷனாவுக்கும் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்தனர்.
சுப்பிரமணி வெளியே சென்றுவிட்டதால் வசந்தி தனது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ் என்பவரை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச்செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து வசந்தியும், தர்ஷனாவும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ராஜேசுடன் சென்றுள்ளனர். சிகிச்சை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது நடுவில் அமர்ந்திருந்த தர்ஷனா கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது.
இதில் தர்ஷனாவின் கழுத்து இறுகியதால் தலை துண்டாகி ரோட்டில் விழுந்தது. இதைப் பார்த்து பின்னால் அமர்ந்திருந்த வசந்தி அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே ராஜேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வசந்தி ஓடிச்சென்று தனது மகளின் உடலை பார்த்து கதறினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் கண் முன்பே நடந்த இந்தக் கோரச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.