சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் (DPI) உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவரிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தனக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை கிடைத்துள்ளது எனக் கூறி பணி நியமன ஆணைகளைக் காண்பித்துள்ளார். அதைப் பார்க்கும்போது போலியானது என தெரிந்தது.
இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
இதில், அவர் ராயப்பேட்டை பி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. அவர் பள்ளிக்கல்வித் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.
மேலும் போலியாகப் பணி நியமன ஆணைகளையும் தயாரித்துக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.