தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததை அடுத்து பத்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாகப் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர்," 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள்,649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்பிரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜனவரி 28ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். பிப்ரவரி 4ந்தேதி வேட்புமனு தாக்கல் கடைசிநாள். பிப்ரவரி 5ம்தேதி வேட்பு மனு பரிசீலனை. பிப்ரவரி 7ம் தேதி மனுக்கள் திரும்பப்பெறக் கடைசி நாள். தேர்தல் நடைபெறும் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்,
மார்ச் 4 ஆம் தேதி மேயர், துணை மேயர், நகர்மன்றத் துணைத் தலைவர் , பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும்.” என அறிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதலே அமலுக்கு வந்ததாக கூறிய அவர், கொரோனா பரவல் காரணமாக வாக்கு சேகரிக்கும் போது வீடு விடா மூன்று நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஜனவரி 31ம் தேதி வரை பேரணி, பொதுக் கூட்டங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.