இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (20.01.2022), சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், திருக்கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்,
ரூ.10 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவிற்கு மூன்று உறுப்பினர்களை ஆலோசனைக் குழுவிலிருந்து தேர்வு செய்தல் குறித்தும்,
தல புராணம்/ தல வரலாறு ஆவணப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல் இத்துறையின், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களின் மரபுகளுக்கேற்ப அதன் தொன்மை, வரலாற்று முக்கியத்துவம், காவியங்கள், புராணங்கள், கட்டடக் கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள், மூலிகை ஓவியங்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கித் தலவரலாறும், தலபுராணமும் நூல்களாக வெளியிடப்படுகின்றன. சிறிய திருக்கோயில்களுக்கு அவற்றின் வழிபாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக தகவல் சிற்றட்டைகளும் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேற்சொல்லப்பட்ட தல வரலாறு மற்றும் தல புராணம் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்துதல், மின்னணுமயமாக்குதல், அச்சிடுதல் மற்றும் திருக்கோயில்களில் பக்தர்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்துதல் தொடர்பாகவும்,
அறிய புத்தகங்கள்/ ஓலைச்சுவடிகள்/ செப்பேடுகள் பாதுகாத்திடல் திருக்கோயில்களின் தல வரலாறு மற்றும் தல புராணத்தைத் தவிர திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களால் வெளியிடப்பட்ட அறிய வகை புத்தகங்கள் ஆகியவற்றை மறு பதிப்பாக்கம் செய்தல், மின்னணுமயமாக்குதல் மற்றும் அப்புத்தகங்களைத் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தல். ஓலைச் சுவடிகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றினை படி எடுத்தல் மற்றும் ஒளி வருடல் செய்து பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருக்கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் மற்றும் இசை விற்பன்னர்கள் பணி இன்றியமையாததாகும். இந்த பணிகளுக்கு திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் பொருட்டு திருக்கோயில்கள் சார்பில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் இசைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கான திட்டத்தின் தரத்தினை உயர்த்தி மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்துதல் குறித்தும்,
இந்து சமயம் மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைத்தல் இந்துசமய நிறுவனங்களின் நிர்வாகத்தை கண்காணித்து நெறிப்படுத்தும் பொருட்டு கடந்த 1926ம் ஆண்டு இந்துசமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. பின்னர், இதே நோக்கத்திற்காக 1951ம் ஆண்டு வாரியம் கலைக்கப்பட்டு தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. தற்போது 1959ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின் பிரிவுகளின்படி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள காலமாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியன குறித்தும்,
ஆகம நூல்களை ஆவணப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல் தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ஆகமத்தின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ளது. வழிபடும் பக்தர்கள், தான் வழிபடும் கோயிலின் ஆகமம் குறித்து அறிந்து கொள்ளும்பொருட்டு அந்தந்த திருக்கோயில்கள் எந்தெந்த ஆகமத்தின் கீழ் அமையப்பெற்றுள்ளதோ அந்த ஆகமத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும்,
ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள் தொன்றுதொட்டு தமிழ் மக்களிடையே இருந்துவரும் அறநெறி மற்றும் ஆன்மீக நெறிகளை வருங்கால சந்ததிகளிடம் சேர்க்கும்பொருட்டு, ஆன்மீக சொற்பொழிவுகள், ஆன்மீக வகுப்புகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் மேம்படுத்தி நடத்த திட்ட வரைவு தயார் செய்தல் குறித்தும்,
திருக்கோயில் சேவைகளை கணினிமயமாக்குதல் (Virtual Services) திருக்கோயில்களில் வழங்கப்படும் சேவைகளை பக்தர்கள் எளிய முறையில் பெறும்பொருட்டு அர்ச்சனை/ அபிசேக கட்டணம், தங்கும் விடுதிகள் கட்டணம் செலுத்துதல், பொதுமக்கள் நன்கொடைகள், திருமண மண்டபம் கட்டணம், கம்பி வடவூர்தி கட்டணம், மலைக் கோயில்கள் ஊர்தி பயணத்திற்கு முன் பதிவு செய்தல் போன்ற அனைத்து சேவைகளையும் கணினிமயமாக்கி, அயல்நாடு வாழ் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் இணையதளம் மூலமாக பயனடையச் செய்தல். திருக்கோயில்களின் நிதி மேலாண்மையினை மேம்படுத்துதல் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு அசையா சொத்துக்கள் மூலமாகவும், பொதுமக்கள் காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் சேவை கட்டணங்கள் அனைத்தும் ரசீதுகள் மூலமாக வருவாய் பெறப்பட்டு வந்தன. அவ்வாறு பெறப்படும் தொகைகளை வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும்பொருட்டு, கணினிமயமாக்கி அதன் மூலம் அதிக வருவாய் பெற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது அசையா சொத்துக்கள் மூலம் கிடைக்கப்பெறும் வாடகை/குத்தகை போன்ற இனங்கள் மற்றும் அனைத்து சேவை கட்டணங்கள் பெறுவதும் கணினிமயமாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவும், திருப்பணிகள் மேற்கொள்ளவும் திருக்கோயில் நிர்வாகங்கள் பெருமளவில் செலவுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய காலத்திற்கேற்றவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருக்கோயில்களின் நிதி மேலாண்மையினை மேம்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தர மோகன் இ.ஆ.ப, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு), சு.கி.சிவம், கருமுத்து தி.கண்ணன், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.இராமசுப்பிரணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், திருமதி ஸ்ரீமதி சிவசங்கர்,
திருமதி தேச மங்கையர்க்கரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.