அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாள் விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் மனோ தங்கராஜ் (காணொலி மூலம் பங்கேற்பு) தலைமைச்செயலாளர் இறையன்பு, சட்டமன்ற உறுப்பினரும், திமுக அயலக அணி செயலாளர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகில் பல்வேறு நாடுகளில் பிரிந்திருந்தாலும் தமிழால் இணைந்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் தமிழக மக்களின் அரசாக திமுக அரசு உள்ளது. திமுக அரசு அமைந்ததும் அயலக மக்கள் நலன் காக்க ஏராளமான திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் நலனுக்கான ஆட்சியாக இருக்கும். 30ற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகள் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
வணிகம் செய்வதற்காக சேர்ந்தார்கள் வாழ்வதற்காக சென்றார்கள் புதிய இடங்களை அறிவதற்காக சென்றார்கள் இப்படி எங்கு தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு தாய்வீடு தமிழகம் தான்.
தமிழர்கள் வெளிநாட்டில் பணியின் போது இறக்க நேரிட்டால் கல்வி, திருமண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய திறமையை நம்பி வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கு நன்றி என்றும் 2011ல் வெளிநாடு வாழ் தமிழர் நல சட்டம் இயற்றப்பட்டது. அதே போல் வாரியம் அமைக்கப்படும் என்று கூறினேன், ஆட்சி மாற்றத்தால் செய்ய முடியவில்லை. தற்போது அது நிறைவேற்றப்பட்டு உள்ளது.
317 கோடியில் இலங்கை தமிழர்களுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்கு தள்ள வேண்டும். ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டும். அயலக தமிழர்களை தமிழ்நாட்டின் பண்பாட்டு தூதர்களாக பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தமிழகத்தை அரவணைத்து வாழுங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை தங்களது குழந்தைகளை அழைத்து வந்து கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரை காட்டுங்கள் என அயலக தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார். இங்குள்ள தமிழர்களுக்கு அனைத்துமாக இந்த அரசு இருப்பது போல் அயலக தமிழர்களுக்கும் இந்த அரசு அனைத்துமாக இருக்கும் என தெரிவித்தார்.