தமிழ்நாடு

”வெள்ளிக்குதான் குறி; ஆனா தங்கம்னா 2, 4 பவுன்தான்” யார் இந்த சில்வர் சீனிவாசன்? - சுவாரஸ்ய தகவல்கள்!

கல்யாண சம்மந்தம் பேசுவதாகச் சொல்லி சென்னை பம்மலில் 2 சவரன் தங்கச் சங்கிலியை முதியவரான பிரபல திருடன் ஆட்டையப்போட்டுள்ளார்.

”வெள்ளிக்குதான் குறி; ஆனா தங்கம்னா 2, 4 பவுன்தான்” யார் இந்த சில்வர் சீனிவாசன்? - சுவாரஸ்ய தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்தானம் என்பவர் தன்னுடைய உறவினரின் மகனுக்காக வரன் வேண்டி நாளிதழில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கண்ட சீனிவாசன் என்ற 84 வயதான முதியவர் சந்தானத்தை அணுகி தனக்கு வங்கியில் பணியாற்றும் 36 வயதில் பெண் உள்ளார். அவருக்குதான் மணமகன் தேடுவதாகக் கூறியிருக்கிறார்.

தன்னுடைய உறவினரின் மகனுக்குதான் பெண் பார்ப்பதாகவும் அவர்கள் பம்மலில் வசிக்கிறார்கள் எனக் கூறி சந்தானம், சீனிவாசனை மாப்பிளை இருக்கும் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து அனுப்பியிருக்கிறார்.

அங்கு பையன் வீட்டாரிடம் எளிதாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சீனிவாசன் திருமண பேச்சுவார்த்தையையும் சுமுகமாக பேசி முடித்திருக்கிறார். மேலும் தனக்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் எனச் சொல்லி மணமகனின் ஜாதகத்தை பார்த்துவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.

”வெள்ளிக்குதான் குறி; ஆனா தங்கம்னா 2, 4 பவுன்தான்” யார் இந்த சில்வர் சீனிவாசன்? - சுவாரஸ்ய தகவல்கள்!

எனவே நீர் நிரப்பிய சொம்பில் 2 பவுன் தங்கச் சங்கிலியை போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும் எனக் கூறி மணமகனின் வீட்டிலேயே மதிய சாப்பாட்டை உண்டு முடித்த சீனிவாசன் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வருவதாகச் சொல்லி கிளம்பியிருக்கிறார்.

திரும்பி வருவதாகச் சொன்ன சீனிவாசன் வெகுநேரமாகியும் வராத காரணத்தால் சந்தேகமடைந்த பையன் வீட்டார் பூஜை அறையில் வைக்கப்பட்ட தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உடனடியாக இது தொடர்பாக சந்தானத்திடம் தகவல் தெரிவிக்க அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவரமே தெரிந்துள்ளது. அதாவது, மாப்பிளை பார்ப்பதாக வந்து செயினை ஆட்டையப்போட்டது பிரபல திருடன் சில்வர் சீனிவாசன் என்பது குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

84 வயதான இந்த சில்வர் சீனிவாசன் வெள்ளிப்பொருட்களை மட்டுமே திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பவராம். கடந்த 2018ம் ஆண்டு மைலாப்பூரில் நடந்த திருட்டு சம்பவத்தில் சிக்கி சிறைத் தண்டனை பெற்ற இந்த சில்வர் சீனிவாசன் அதன் பிறகு இப்போதுதான் வெளியில் தென்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து பம்மல் வீட்டில் புகுந்து நைசாக தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சில்வர் சீனிவாசனை போலிஸார் தேடி வருகின்றனர்.

”வெள்ளிக்குதான் குறி; ஆனா தங்கம்னா 2, 4 பவுன்தான்” யார் இந்த சில்வர் சீனிவாசன்? - சுவாரஸ்ய தகவல்கள்!

யார் இந்த சில்வர் சீனிவாசன்?

திருடர் குலத் திலகமாக இருக்கும் இந்த சில்வர் சீனிவாசன் தொடர்பான சரித்திர பதிவேடு போலிஸாருக்கே பெரும் சுவாரஸ்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

1964ம் ஆண்டு முதல் திருட்டு வேலையை தொடங்கிய இந்த சில்வர் சீனிவாசன் இதுகாறும் 57 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் ஓட்டல் தொழிலாளியாக இருந்தவராம்.

இதனிடையே ஜோசியம், ஆருடம் சொல்வதிலும் வல்லவராக இருந்திருக்கிறார் இந்த சில்வர் சீனிவாசன். அதன்படி 1964ல் ஆந்திராவில் உள்ள விஐபி வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை பார்த்து அதனை மூட்டைக்கட்டிக் கொண்டு எடுத்துச் சென்றிருக்கிறார்.

இப்படியாக இந்த திருட்டுத் தொழிலை தொடங்கிய சில்வர் சீனிவாசன் மீது இதுவரையில் 250க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாம். மேலும் திருடும் இடத்தில் எவ்வளவு வெள்ளிப் பொருட்கள் இருந்தாலும் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொண்டு நைசாக காணாமல் போய்விடுவாராம்.

தங்க நகையாக இருந்தால் 2 முதல் 4 சவரனுக்குள் மட்டுமே திருடுவாராம். மேலும், தான் எங்கு எவ்வளவு திருடினோம் என்பதையும் டைரி போட்டு எழுதி வருவதையும் பழக்கமாக கொண்டிருக்கிறார் இந்த சில்வர் சீனிவாசன்.

”வெள்ளிக்குதான் குறி; ஆனா தங்கம்னா 2, 4 பவுன்தான்” யார் இந்த சில்வர் சீனிவாசன்? - சுவாரஸ்ய தகவல்கள்!

முதியவராக இருப்பதால் அப்பாவி போல் பேசியே எதிரில் இருப்பவர்களை மயக்கி தன் வேலையைக் காட்டிவிடுவாராம். திருடிய பொருட்களை வைத்து பெறப்பட்ட பணம் தீர்ந்துவிட்டால் மீண்டும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறாராம்.

இதுவரையில் ஏகப்பட்ட இடங்களில் சில்வர் சீனிவாசன் கைவரிசையை காட்டியிருந்தாலும் பெரும்பாலும் சின்ன பொருட்களாக இருப்பதால் புகார் ஏதும் பெறப்படாததால் சில வழக்குகளில் இருந்து சில்வர் சீனிவாசன் தப்பித்திருப்பதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, முதியவரோ இளையவரோ எவராக இருப்பினும் தீர விசாரித்து எந்த செயலிலும் ஈடுபட வேண்டும் என போலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories