காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொலை முயற்சி என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமுல் வாங்கி வருவதாகவும், நிறுவனங்களில் ஸ்கிராப் பிசினஸ் மேன் பவர் சப்ளை கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தல் போன்றவைகளை மிரட்டி தன்வசப்படுத்திக் கொண்டு கமிஷனை பெற்றுக்கொண்டு அவருக்கு கீழே உள்ள குட்டி ரவுடிகளுக்கு வழங்கி வந்துள்ளார்.
மேலும் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரூபாவதி என்ற பெண்மணி கொலை மிரட்டல் விடுத்து தனக்கு சொந்தமான இடத்தை பறித்துக் கொண்டதாக சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் கடந்த வருடம் எட்டாவது மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பிரபல ரவுடி படப்பை குணா கொரோனா இருப்பதாக போலியான சான்றிதழ் வழங்கி ஏமாற்றியதால் அவருக்கு வழங்கிய பிணை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்றிலிருந்து இதுவரை படப்பை குணா தலைமறைவாக இருந்து கொண்டு பல குற்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருவதால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் படப்பை குணாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் படப்பை குணாவுக்கு உதவி செய்த காவல்துறையினர் மற்றும் கூட்டாளிகளை கைது செய்தும் வழக்கு பதிவு செய்தும் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்தும் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று படப்பை குணாவின் மனைவியும், திருப்பெரும்புதூர் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான எல்லம்மாவை கைது செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்லம்மாளை சமீபத்தில் பா.ஜ.க கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.