தமிழ்நாடு

“போக்சோ குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்”: முதலமைச்சர் உறுதி!

போக்சோ வழக்குகளை விசாரிக்க திண்டுக்கல், தருமபுரி, தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக “போக்சோ நீதிமன்றங்கள்” அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“போக்சோ குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்”: முதலமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை (தொடர்ச்சி):

அ.தி.மு.க.-வைச் சார்ந்த உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசும்போது, கொரோனா தடுப்புப் பணிகளில் இந்த அரசு துரிதமாகச் செயல்படுகிறது என்று சொன்னார்கள். அதற்காக முதலில் அவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு அ.தி.மு.க முழுமையான ஆதரவு தரும் என்று சொன்னதற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் நேற்றைய தினம் இங்கே பேசும்போது, “ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்கு நூல் விலை ஏற்றத்தினைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நான் ஏற்கெனவே கடந்த 27.11.2021 அன்று ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் எழுதி “நூல் விலை ஏற்றத்தினைக் குறைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த அரசு நெசவாளர்கள் நலன் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

உறுப்பினர் ப. அப்துல் சமது அவர்கள் “சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் ஏற்கனவே அறிவித்தவாறு, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் பிறகு பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, தமிழகச் சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், பயன்பெற இயலாத - தகுதி பெறாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணை நோய்கள் உள்ள உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் உள்ளிட்டவர்கள் குறித்து தற்போது உள்ள சட்ட விதிகளின்படி ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் அவர்களின் தலைமையின்கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டுவரும் இந்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பதனை பேரவைத் தலைவர் வாயிலாக இந்த மன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், உறுப்பினர்கள் சின்னதுரை மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது குறித்துப் பேசினார்கள். இந்த அரசு விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள அரசு என்பதால், கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் தொடங்கி மூன்று கட்டங்களாக பெய்த வடகிழக்குப் பருவ மழை காரணமாக பாதிக்கப்பட்ட, பின் குறுவை பருவத்தில் விளைந்த பயிர்கள், சேதமடைந்த முன் பருவத்தில் பயிரிடப்பட்ட விளைந்த சம்பா நெற்பயிர்கள், மறு நடவுச் செலவு, பயிறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், சிறு தானியப் பயிர்கள், கரும்புப் பயிர்கள், தென்னை பயிர்கள் ஆகியவற்றிற்கு நிவாரணமாக 1 இலட்சத்து 62 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கு 132 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, பெரு விவசாயிகள் 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேல் பயனடையும் இந்த நிவாரண நிதி இரண்டொரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு மாநில நிதியிலிருந்து இந்த நிவாரணத் தொகையை வழங்குகிறது என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் “நமக்கு நாமே திட்டத்தின்கீழ் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுடைய பங்கு என்பதை பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு என விதிகளைத் தளர்த்த வேண்டும்” என்று இம்மாமன்றத்திலே கோரிக்கை வைத்துள்ளார். அடித்தட்டு மக்களின் குரலுக்கு தொன்று தொட்டு செவி சாய்த்துவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு “நமக்கு நாமே திட்டத்தைப் பொறுத்தமட்டில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு என விதிகள் தளர்த்தப்படும்” என்று நான் அறிவிக்கிறேன்.

அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்று ஆளுநர் உரையில் அறிவிப்பு இடம்பெற்றிருந்தாலும் - உறுப்பினருடைய கோரிக்கையை ஏற்று, “மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மட்டுமின்றி - பழங்குடியினர் நலப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளும் - அதற்கு தேவையான உட்கட்டமைப்பும், கூடுதலாக நிதி ஒதுக்கி நிறைவேற்றித் தரப்படும்” என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் கோ.க.மணி அவர்கள் பேசும்போது “பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உட்படும் நேர்வுகளில் தொடர்புடைய நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதுதொடர்பாக நானே காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 24 ஆயிரத்து 513 முகாம்கள் பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன. 249 விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்சோ வழக்குகளை விசாரிக்க திண்டுக்கல், தருமபுரி, தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக “போக்சோ நீதிமன்றங்கள்” அமைக்கப்படுகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இதுவரை 2,363 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பதிவுசெய்யப்பட்ட 338 வழக்குகளில், 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

வழக்குகளில் விரைவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் அறிவுறுத்தியதற்கேற்ப, மே மாதத்திற்கு பிறகு சென்னை இராயப்பேட்டை காவல் நிலையத்தில் 19-5-2021 அன்று போடப்பட்ட போக்சோ வழக்கு ஒன்றில் 23 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திலே வழக்கு விசாரணை 82 நாட்களில் முடிந்து 31-8-2021 அன்று தண்டனையே வழங்கப்பட்டு விட்டது என்பதை நான் பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இதுபோன்று முதல் தகவல் அறிக்கைகளில் விரைந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவது, ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றக் குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள், “பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைத்தார் - நேற்றைய விவாதத்தின் போது அதை எடுத்துச் சொன்னார். இத்தொழிற்சாலையில் இருக்கக்கூடிய பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதாக எனக்கு தகவல் வந்த உடன் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரைப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கே அனுப்பி வைத்து, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நான் நடவடிக்கை எடுத்தேன்.

எனது அறிவுறுத்தலின் பேரில், 23.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழில் துறைக்கான அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு கூறிய ஆலோசனைகளைத் தவறாமல் செயல்படுத்துவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனமும் உறுதி அளித்திருக்கிறது. இதன் விளைவாக, ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக இரண்டு விடுதிகளில் தங்கியிருக்கக்கூடிய 500 தொழிலாளர்கள் மூலம் 12.1.2022 அன்று உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்ற செய்தியும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ, 18,750 பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் மற்றும் பிற நிறுவன ஊழியர்கள் தங்குவதற்கேற்ப வல்லம் வடகாலில் ஒருங்கிணைந்த தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலே செயல்படக்கூடிய அரசு. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கும் என்றைக்கும் ஆதரவாக இருந்தும், தொழிலாளர்களுடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் செய்யும் என்று பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விடுதி ரூ.570 கோடி செலவிலே 20 ஏக்கர் நிலப்பரப்பிலே 8 தொகுதிகளாக 11 மாடிகளை கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது. புதுக் கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டு, 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories