கடந்த 10 ஆண்டுகளாக வீழ்ந்து கிடந்த தமிழகத்தை தமது நிர்வாக திறமையால் தலைநிமிர செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என “வளர்ச்சியின் முதல்படி” என்ற தலைப்பில் ‘தினகரன்’ நாளிதழ் தனது 5.1.2022 தேதியிட்ட இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. இதில் திறமையற்ற அ.தி.மு.க. அரசையும், அதிகாரிகளையும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தினகரன்’ தலையங்கம் வருமாறு :-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிதியாண்டில் தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு 17 சதவீதம் குறைந்து இருப்பது அதன் முதல் அறிகுறி. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கடந்த 9 மாதங்களில் கடன் வாங்கும் அளவு 17 சதவீதம் குறைந்து இருக்கிறது என்றால் இது வளர்ச்சியின் முதல்படி என்று தானே கூற வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக அரசின் மோசமான நிதிநிர்வாகம் காரணமாக ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமை தமிழக மக்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. அரசுகள் வரும், போகும். ஆனால் நிதித்துறை அதிகாரிகள் தான் இத்தகைய சீரழிவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். கடன் சுமையை குறைக்கவும், வரிவருவாயை அதிகரிக்கவும் அவர்கள்தான் யோசித்து இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசின் நிர்வாக முறைகேட்டிற்கு அவர்கள் ஒத்துழைத்ததால் இத்தனை கடன் பேரிடரில் தமிழகம் சிக்கிக்கொண்டது.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் கவனம் நிதிநிலைமை சீரமைப்பதில் இருந்தது. அதனால் தான் 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழகம் ரூ.52 ஆயிரம் கோடி கடன் மட்டுமே வாங்கியிருக்கிறது. 2020ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.63 ஆயிரம் கோடி வாங்கியிருந்தது அதிமுக அரசு. தற்போது ரூ.11 ஆயிரம் கோடி கடன் வாங்குவது குறைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கொரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு தமிழகத்தின் வரிவருவாய் சுமார் 22 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை ரூ.97,635.78 கோடி வரிவருவாய் இருந்தது. ஆனால் 2021ல் ஏப்ரல் முதல் நவம்பர் வரை ரூ.1,18,992.48 கோடி வரிவருவாய் வந்துள்ளது என்றால் இது எப்படி சாத்தியம்?. முதல்வர் மு.க.ஸ்டாலினின் திறன் மிகுந்த நிர்வாகத்தின் வெற்றி தான் இதற்கு காரணம்.
நவம்பர் வரை ஜிஎஸ்டி வரிவசூல் மட்டும் ரூ.66,047 கோடி வந்துள்ளது. இது 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.34 சதவீத வளர்ச்சி ஆகும். இப்போதும் கூட ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வந்தாலும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டாலும் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நம்புகிறார்கள். பெரிய அளவில் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருந்தாலும் வரிவருவாய் அதிகரித்து, கடன் வாங்கும் அளவு குறைந்திருப்பது மாற்றத்தின் அறிகுறி. எந்த வளர்ச்சிப்பணிகளையும், நலத்திட்டங்களையும் நிறுத்தாமல் இந்த குறுகிய காலத்தில் இத்தனை முன்னேற்றம் கண்டுள்ளது தமிழகம்.
மு.க.ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் இன்னும் நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிச்சயம் தமிழகம் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் மக்கள் மனம் அறிந்தவர் மட்டும் அல்ல. மக்கள் மனம் கவர்ந்தவரும் கூட. இதோ 2.15 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு ரூ.1297 கோடியில் 21 வகை பொருட்களை பரிசாக வழங்கி மக்கள் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க வைத்து இருக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.