தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
முன்ஜாமின் கோரிய ராஜேந்திர பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் அன்று முதல் தலைமறைவானார். அவரை கைது செய்ய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலிஸார் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனிப்படை போலிசார், இன்று கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.
அவருடன், தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலிஸார் கைது செய்தனர்
கர்நாடகா மாநில தனியார் காரில் அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே தனிப்படை போலிசார் விருதுநகர் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
விருதுநகரில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு இன்றிரவே சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.