அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பண மோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ராஜேந்திரபாலாஜி மொபைல் போன்களை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலால் ஒரு தனிப்படை டெல்லிக்கும் சென்றது.
ராஜேந்திரபாலாஜி இப்படி ஒவ்வொரு இடமாக தப்பிக்கொண்டே வந்த நிலையில் அவரது நடமாட்டத்தை முடக்க அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ராஜேந்திர பாலாஜியின் நண்பர்கள், கட்சியினர் என நெருக்கமானவர்கள், குடும்பத்தினருக்கு எந்த போன் வந்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.
மேலும் ரிசார்ட்கள், ஹோட்டல்களில் தங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர் ஒவ்வொரு ஊராக காரில் தப்பிக்கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அவர் கர்நாடகாவில் இருப்பதாக தனிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சுமார் 20 நாட்களாக தனிப்படை போலிஸார் தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை போலிஸார் இன்று சினிமா பணியில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ தூரம் காரில் விரட்டிச் சென்று ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன் முன்பாக சுற்றிவளைத்தனர்.
போலிஸ் வாகனத்தைக் கண்டு காரில் தப்பியோட முயன்ற ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மற்றும் விருதுநகர் தனிப்படை போலிஸார் ஹசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதன்மூலம் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.