தமிழ்நாடு

"ஒரு உதவிதான் கேட்டேன்.. வீடும் கொடுத்து படிக்கவும் வைக்கிறீங்க”: முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் உதவி பெற்ற மாணவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

"ஒரு உதவிதான் கேட்டேன்.. வீடும் கொடுத்து படிக்கவும் வைக்கிறீங்க”: முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின் பேரில் குடியிருக்க வீடு, மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, கல்லூரியில் படிக்க இடம் உள்ளிட்ட உதவிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று வழங்கினார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் சோமூர் ஊராட்சி எழுத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (17). இவரது தந்தை கோவிந்தராஜ் பெயிண்டராக பணிபுரிகிறார். தாய் தனலட்சுமி கூலித்தொழிலாளி. இந்நிலையில் தனது மகள் ஷாலினியை அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.

பின்னர் ஷாலினி தனது பாட்டி ஊரான திண்டுக்கல் மாவட்டம் காசிபாளையத்தில் மேல்நிலைக் கல்வி படித்துவந்தார். 4 மாதங்களுக்கு முன்பு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியன்று திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பு பிரிவு அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஷாலினியின் கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து தான் உயர்கல்வி பயில உதவி செய்திட வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மேற்கொண்ட நடவடிக்கையினால் ஷாலினியின் குடும்பத்தினருக்கு கரூர் சணப்பிரட்டியில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடும், மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தாந்தோன்றிமலை அரசுக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பு பயில்வதற்கான இடமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"ஒரு உதவிதான் கேட்டேன்.. வீடும் கொடுத்து படிக்கவும் வைக்கிறீங்க”: முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி!

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலின்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையினை வழங்கினார்.

மேலும், இந்த குடியிருப்பை பெறுவதற்கு பயனாளி செலத்தவேண்டிய பங்களிப்புத்தொகையான ரூ.1.88 லட்சத்தையும் மாவட்ட நிர்வாகமே செலுத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் வழங்கிய மாவட்ட ஆட்சியர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் ஷாலினி விரும்பும் படிப்பிற்கான இடத்தை ஒதுக்கித்தரவும் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஷாலினியின் பெற்றோர் சுயதொழில் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு உரிய கடனுதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவும், அவரது சகோதரர் கல்வி பயிலத் தேவையான உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து, மாணவி ஷாலினி தெரிவிக்கையில், "ஒரு உதவி கேட்டு வந்த எனக்கு குடியிருக்க வீடு, மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கு ஆணை, உயர்கல்வி பயில உதவி என என் எதிர்காலத்திற்கும், குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழக அரசிற்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

banner

Related Stories

Related Stories