அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலை வாங்கித் தருவதாக 30 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது அ.தி.மு.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் அ.தி.மு.க-வில் பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
பக்கிரிசாமி டிசம்பர் 21ஆம் தேதியன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், மதுரையில் வட்டாட்சியராக இருக்கக்கூடிய தனது நண்பர் தனலட்சுமி என்பவர்
தன்னை அணுகி, அவரது மகன் பாஸ்கருக்கு மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருமாறு கூறியதாகவும், அதனால் தனது நண்பர் நாமக்கல் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி என்பவர் மூலமாக அப்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது தங்கமணி 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பணி நியமன ஆணையை ஒரு வாரத்தில் வாங்கிக் கொள்ளுமாறு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு வாரத்தில் பணத்தைத் தயார் செய்து தங்கமணியின் வீட்டில் அவரது மகன் தரணிதரனிடம் 30 லட்சம் ரூபாயைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் பல மாதங்களாக வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் தங்கமணி ஏமாற்றிவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனவே தன் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் தன்னை ஏமாற்றிய தங்கமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு அளித்துள்ளார்.