தமிழ்நாடு

“மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை பரப்பியது திராவிட இயக்கம்தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

"அம்பேத்கர் சுடர் விருதை பெரியார் திடலில் பெறுவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை பரப்பியது திராவிட இயக்கம்தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மராட்டியத்தை விட அம்பேத்கரின் புகழை அதிகமாகத் தமிழ்நாட்டில் பரப்பியது திராவிட இயக்கம்தான்!” என அம்பேத்கர் சுடர் விருது பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை வி.சி.க-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் 2021ஆம் ஆண்டுக்கான வி.சி.க-விருதுகள் இன்று பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ‘அம்பேத்கர் சுடர்’ விருது பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அம்பேத்கர் சுடர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பெரியார் ஒளி விருதை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், காமராசர் கதிர் விருதை நெல்லை கண்ணன் அவர்களும், அயோத்திதாசர் ஆதவன் விருதை குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால் அவர்களும், காயிதேமில்லத் பிறை விருதை அல்ஹாஜ் மு. பஷீ்ர் அகமது அவர்களும், செம்மொழி ஞாயிறு விருதை செம்மொழி க.இராமசாமி அவர்களும் பெற்றனர்.

‘அம்பேத்கர் சுடர்’ விருது பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய ஏற்புரையில், “என்னைத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான். இதற்குமேல் எவ்விளக்கவும் கொடுக்கவேண்டியதில்லை.

எனக்கு இவ்விருதினை தருகிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு அச்சமிருந்தது. அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை. எனது கடமையைத்தான் செய்தேன்.

மாநில ஆதிதிராவிடர் ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு, அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றைச் செய்தாலும் அவற்றை எல்லாம் செய்யத் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது என்பதே உண்மை.

கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைகொள்பவன். அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயரிட்டவர் கலைஞர் அவர்கள் தான். மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை அதிகமாகத் தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்.

‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நான் நடித்தேன். நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். இறுதியாக நான் தாக்கப்படும் ஒரு பாடல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதற்கு கிடைத்த பரிசு என அதை எழுதியவரும் கலைஞர்தான்.

அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாருமில்லை. அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதைவிட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது?

முதன்முதலில் முதலமைச்சராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார். பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார். அவருடைய சாதனையின் தொடர்ச்சியாகத்தான் இவ்வாட்சி நடைபெறுகிறது.

நான் முதல்வராக பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தை கூட்டினேன். அமைச்சர்கள், அதிகாரிகளுடான கூட்டத்தில் பேசினேன். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும்.

இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும். வன்கொடுமை நடக்ககூடாது என்பது எங்கள்தான் எங்கள் கொள்கை. சமூக பாகுபாடுகள் இம்மண்ணில் பேதம் கூடாது. - இது தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை.

மனமாற்றம் தேவை என்று விட்டுவிடக்கூடாது சட்டங்கள் அதற்கு தேவை. சீர்திருத்தப் பரப்புரைகளை நடத்திட வேண்டும். சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண் தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும். இல்லையென்றால் அவற்றை புறம்தள்ளவேண்டும் என தொழிலதிபர்கள் மாநாட்டில் சொன்னேன்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான் அவர்களின் வாழ்க்கையைப்போல் என் வாழ்க்கைய வடிவமைத்துக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன்” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories