முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ”டாக்டர் கலைஞர் அவர்களின் உயிரான உதவியாளர் சண்முகநாதன் காலமானார் என்ற செய்தி பேரிடியாகத் தலையில் விழுந்தது. உடல் வேறு, உயிர் வேறு என்று எப்படி பிரிக்க முடியாதோ அப்படி அண்ணன் கலைஞர் அவர்களுக்கு உயிராக இருந்தவர் சண்முகநாதன்.
ஐம்பதாண்டுகள் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் சண்முகநாதன். உலகத்தில் தலைவர்களுக்குச் செயலாளர்கள் வாய்ப்பது உண்டு. ஆனால் டாக்டர் கலைஞர் அவர்களுக்குக் கிடைத்த சண்முகநாதன் அவர்களைப் போல உலகத்தில் எந்தத் தலைவருக்கும் ஒரு உதவியாளர் கிடைத்தது இல்லை.
கலைஞர் அவர்களுடைய உரையாடல்களையோ, அரசியல் அணுகுமுறையையோ சண்முகநாதன் எவரிடத்திலும் பேசியது கிடையாது. நீங்கள் பலத்த மூச்சு விடுவதைக்கூட சண்முகநாதனிடம் அறிய முடியாதே என்று ஒருமுறை நான் தலைவர் கலைஞரிடம் குறிப்பிட்டேன்.
பொழுது புலர்ந்தவுடன் கலைஞர் அவர்களுடைய இல்லத்திற்கு வருகிற சண்முகநாதன், இரவு கலைஞர் அவர்கள் துயிலச் சென்ற பிறகே தன்னுடைய வீட்டிற்குச் செல்வார். கலைஞர் அவர்கள் ஆற்றுகிற மேடை உரைகளை அன்று இரவிலேயே தட்டச்சு செய்து முரசொலிக்கு அனுப்பிவிடுவார். இன்றுள்ள கணினி வசதி அப்போது கிடையாது.
கலைஞர் என்ன நினைக்கிறார், என்ன சொல்வார் என்பது சண்முநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
சிரித்த முகத்தோடு கழகத்தினரை வரவேற்கின்ற சண்முகநாதனின் பாசப் புன்னகை எங்கே? இனி அந்தச் சகோதரனிடம் உரையாட முடியாதே, நான் அவரிடம் பாசமும் நேசமும் கொண்டிருந்தேன்.
தலைவரின் செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உலகத்திலேயே சண்முகநாதன் ஒரு உதாரணம் ஆவார். கலைஞர் அவர்களின் உரைகளைக் குறிப்பெடுக்க வந்த காவல் துறை உதவியாளர்தான் சண்முகநான். அப்படித்தான் அவர் கலைஞரிடம் பணியில் வந்து சேர்ந்தார்.
கலைஞர் மறைந்த சிறிது காலத்திற்கு உள்ளாகவே, கலைஞரிடம் பணியாற்றுவதற்காக சண்முகநாதன் உயிர் போய்விட்டது. மறக்க முடியாத நட்புறவு கொண்டிருந்த சண்முகநாதன் அவர்கள் மறைவினால் கண்ணீர் சிந்தும் தி.மு.கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், தி.மு.கழகத்தினருக்கும், சண்முகநாதன் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.