சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆமெல்லா ஜோதினி கோபால் பிள்ளை (58) என்பவர் கடந்த 17.11.2021 அன்று தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு 20.11.2021 அன்று திரும்பியிருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, வீட்டில் வைத்திருந்த ரூ.4.5 கோடி பணம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆமெல்லா ஜோதினி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை செய்தும், கொள்ளையடித்தவர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டதில் மணி (31), சதீஷ்குமார்(32), சுரேஷ்(32) ஆறுமுகம், (49) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.35 கோடி பணம் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் புகார்தாரரிடம் பணிபுரிந்து வந்த நபரின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர் மற்றும் சில நபர்கள் சேர்ந்து, ஆமெல்லா ஜோதினியின் வீட்டு சாவி போன்று கள்ள சாவி போட்டு வைத்திருந்து, புகார்தாரர் வெளியூர் சென்றிருந்த சமயம் கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் மீது கிண்டி காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்ட 4 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.