வேலூர் மாவட்டம், வேலூர் நகரில் காட்பாடி சாலையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இக்கடையில், காலை கடையை திறந்த போது ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மர்ம நபர்கள் கடையின் பின்புறமாக உள்ள கழிவுநீர் கால்வாயை உடைத்து துளையிட்டு, நகைகடையினுள் சென்று தங்கள் நகைகளை கொள்ளையடித்து கொண்டு மீண்டும் அதே வழியில் தப்பி சென்றுள்ளனர்.
இதில் நகைகடையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரே அடித்துவிட்டு, பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் பாபு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சம்பந்தபட்ட கடையினுள் விசாரணை செய்து வருகின்றனர்.
மோப்ப நாயும் கடையினுள்ளே சென்று மீண்டும் கழிவுநீர் கால்வாய் பள்ளம் தோண்டப்பட்ட இடம் அருகில் நின்றது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் கைரேகைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இரண்டாவது மாடியில் தங்கியுள்ளனர். மக்கள் நடமாட்டமுள்ள பிரதான சாலையில், இரவு காவலர்கள் 4 பேர் இருந்தும் இரவு கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வேலூர் பகுதிகளில் வடநாட்டு கொள்ளை கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.