மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம், 'புஷ்பா'. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
படத்துக்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். தமிழ் பதிப்புக்காக விவேகா பாடல்களை எழுதி உள்ளார். இவற்றில், ஆண்ட்ரியா பாட, சமந்தா ஆடும் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், ‘ஓ சொல்றியா..' என்ற பாடலில் உள்ள வரிகள் ஆண்களை மிகவும் புண்படுத்துவதாக உள்ளதாக குறிப்பிட்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ஓ சொல்றியா..' என்ற அந்த ஆபாச குத்துப்பாட்டில், வரும் வரிகள் ஆண்களை வக்கிர புத்தியுள்ளவர்களாக சித்தரித்திருக்கின்றன. சொல்லக்கூசும் அளவுக்கு ஆண்களை தரம் தாழ்த்தி எழுதப்பட்டுள்ளது.
அந்த பாடலின் ஒரு சில வரிகளில், ஆண்கள் இனத்தையே, மோசமாக சித்தரித்துள்ளனர். அதே போல பாடல் காட்சி மிக ஆபாசமாக, மாணவர்கள் சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் இருக்கின்றது.
தமிழில் இப்பாடலை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம், வழக்கு தொடர்ந்து நடிகை சமந்தா, இயக்குநர் சுகுமார், பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்கப்படும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதே பாடலின் தெலுங்கு பதிப்பிற்கும் ஆந்திராவில் இதேபோல் கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படத்தயாரிப்பு குழு தெரிவிக்கையில், இந்த பாடல் கருத்துகளில் எதிர்த்தரப்பு குறிப்பிடுவது போல தவறாகவோ, ஆபாசமாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை வேண்டும் என்றே விளம்பர நோக்கத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.