சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் , L&T நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிகல் உபகரணங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மூன்று பேர் காவலாளிகளின் பாதுகாப்பையும் மீறி திருட்டுத்தனமாக நுழைந்து, எலக்ட்ரிகல் உபகரணங்களை திருட முயன்றனர். அப்போது 3 பேஸ் லைன் செல்லும் ஸ்விட்ச் பாக்ஸில் கைவைத்த ஒருவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு இரண்டு கைகளும் கருகின. தலையிலும் காயம் ஏற்பட்டது. அவருடன் வந்தவர்கள் இரண்டு பேரும் சத்தம் கேட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்ட நபரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகன்(24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது அவருடைய நண்பர்கள் பாலாஜி மற்றும் விஜய் என்பதும் தெரியவந்தது. பாலாஜி விஜய் இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மின்சாரம் தாக்கி கைகள் கருகிய முருகனுக்கு இரண்டு கைகளையும் எடுப்பதற்கான அறுவை சிகிச்சையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.