ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். பட்டுப்புடவை வியாபாரியான இவர் ஆம்பூர் வெங்கலி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று போலிஸார் என கூறி கனகராஜிடம் ஒன்றை லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கனகராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் சொகுசு காரில் பெங்களூரு - சென்னை சாலையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
பின்னர் உடனே போலிஸார் அந்த காரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பிறகு பின்னால் வந்த போலிஸார் காரில் இருந்தவர்களைத் தப்பிக்க விடாமல் மடக்கிப் பிடித்தனர்.
பிறகு சொகுசு காரை ஆய்வு செய்தபோது கட்டுக் கட்டாக 500 ரூபாய் பணம் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.23 லட்சம் என கூறிப்படுகிறது.
இதையடுத்து காரில் இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் மற்றும் இவர்களுக்கு உதவி செய்த சரத், சதிஷ், தினகரன் ஆகிய 6 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 9 செல்போன்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.