கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமேரி. மூதாட்டியான இவர் மீன் விற்று வருகிறார். இவர் மீன் கூடையை எடுத்துக் கொண்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்வது வழக்கம்.
இப்படி மூதாட்டி செல்வமேரி அரசு பேருந்தில் ஏறினார். அப்போது பேருந்து நடத்துனர் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அவரை பேருந்திலிருந்து இறக்கிவிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பேருந்து நிலைய நிர்வாக அலுவலக அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
இதையடுத்து பேருந்து ஒட்டுநர், நடத்துனர் மற்றும் நேரக் கட்டுப்பாட்டாளர் ஆகிய மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. பின்னர், மீனவ மூதாட்டியைப் பேருந்திலிருந்து கீழே இறக்கிய சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்க தாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்." என தெரிவித்துள்ளார்.