நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த கைலாசநாதர் ஆலயம். இந்த கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 33 ஏக்கர் நிலத்தை அதிமுக நிர்வாகி தலைமையிலான கும்பல் அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கைலாச நாதர் கோவிலின் அறங்காவலர் ராஜா என்பவர் அவருடைய காலத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் தம்பி மகன் அதே பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் கோவில் நிர்வாகத்தை நடத்த உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்துள்ளார். அதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆலயத்தின் குடமுழுக்கு விழாவை நடத்தி வந்த பொன்னம்பலத்திடம் அனுமதி பெற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முருகையன் என்பவர் கோவில் நிலத்தில் சாகுபடி செய்து முறைப்படி குத்தகை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மழை காரணமாக இந்த ஆண்டு தாமதமாக விவசாய பணிகளை தொடங்கியபோது திருமருகல் துணை ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான திருமேனி தலைமையிலான கும்பல் வயதானவர் என்பதால் விவசாய பணிகளை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றி தரும்படியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மக்கள், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும், அதிமுக திருமருகல் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமேனி மற்றும் அரவிந்தன், நடராஜன், சீனிவாசன், விஜயக்குமார், முருகன், இறையன்பு உள்ளிட்ட 7 பேர் மீது நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும், கோவில் நிலத்தை மீட்டு கொடுக்கவும் கொலை மிரட்டல் விடுத்துவரும் நில அபகரிப்பு கும்பலை விரைந்து கைது செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய துணை ஒன்றிய பெருந்தலைவர் திருமேனி மீது, அம்பல் கிராமத்தில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவரின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கு திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.