வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியும் வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்தி, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அப்பகுதி மக்கள் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆய்வின்போது அப்பகுதி சிறுவன் நகுல், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை மழை நிவாரணமாக அளித்தார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று, அமைச்சர் நாசரிடம் ஒப்படைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையோர தேநீர்க்கடையில் தேநீர் அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதைப் பொறுக்கமுடியாத பா.ஜ.கவினர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்டது என அவதூறு பரப்பி வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்று அந்த தேநீர்க்கடையின் டீ மாஸ்டரிடம் நேர்காணல் செய்தது. அதில் பேசியிள்ள டீ மாஸ்டர், “முதலமைச்சர் வருவது குறித்து முன்னதாக எங்களுக்கு தெரியாது.
திடீரென முதலமைச்சர் வந்தார். இங்கிருக்கும் டீ கிளாஸில் எல்லோருக்கும் போலவே எப்போதும் போலவே டீ போட்டுக் கொடுத்தோம். எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவினர் பரப்பிய அவதூறுகளுக்கு டீ மாஸ்டர் பதிலளித்துள்ள காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.