வறுமையின் தத்துவம் என்று புரூதோன் எழுதிய போது, ‘தத்துவத்தின் வறுமை' என்று எழுதினார் மார்க்ஸ். அவை இரண்டும் வறுமை - தத்துவம் ஆகிய இரண்டுக்குமான முரண்பாட்டைச் சொல்லும் புத்தகமாக இன்று உலக அளவில் விளங்கி வருகிறது.
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று சிலர் அறியாமையால் கொக்கரிக்கும் போது, ‘திராவிடமே வளர்த்தது' என்று நாம் சொல்லி வருகிறோம். கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில், பல்வேறு வளர்ச்சியில், சமூக வாழ்க்கையில், சிந்தனைத் திறத்தில், உள்கட்டமைப்பில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகமே சிறந்து விளங்கி வருவதை நாம் சொல்லி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் போட்டுக் கொடுத்த சமூகநீதி அரசியல் - ஆட்சியியலாக மாறியதன் விளைவு இது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இதோ நேற்றைய தினம் ஒரு உதாரணம் கிடைத்திருக்கிறது. இதனை வெளியிட்டது நாம் அல்ல.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் இந்தி பேசும் வட மாநிலங்கள் குறிப்பாக பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களே அதிக அளவில் இடம்பெற்றிருப்பது ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் வறுமையை ஒழிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதும் ஆய்வறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளது.
இந்தியாவின் வறுமை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பன்முக வறுமை குறியீடு' அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் முறையை பயன்படுத்தி, மக்களின் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட 12 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் இந்தி பேசும் வடமாநிலங்கள் குறிப்பாக பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள், வறுமை அதிகம் உள்ள மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலம் வறுமை பட்டியலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 51. 91 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல், 2-ம் இடத்தில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவீதம் மக்களும், 3-ம் இடத்தில் உள்ள பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 37.19 சதவீதம் மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 36 .65 சதவீதம் பேரும், மேகாலயாவில் 32.67 சதவீதம் பேரும், அசாமில் 32.67 சதவீதம் பேரும் வறுமையில் உள்ளனர். பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் மக்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த ஆய்வறிக்கையே சான்று.
வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமையும் போதெல்லாம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு தீவிரமாக செயல்படுத் தப்படும். வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் ஏழை மக்களின் வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தோற்று விக்கப்பட்டன. இதன் காரணத்தினாலேயே இந்தியாவிலேயே வறுமை ஒழிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவது நிதி ஆயோக் ஆய்வறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளது.
வறுமைக் குறைவான மாநிலங்களாக கேரளா முதலிடத்தையும், தமிழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 1967 ஆம் ஆண்டுக்குப் பின்னால் தமிழ்நாடே மோசமாகிவிட்டது என்று மூக்கைச் சிந்தியவர்கள், உற்றுக் கவனிக்க வேண்டிய பகுதிதான் இது. சில மாதங்களுக்கு முன்னால், நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் ஆனது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியல் அது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்று இருந்தது. இப்போது ஏழைகள் 4.89 சதவிகிதம் மட்டுமே உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இதுதான் திராவிடத் தத்துவத்தின் வெற்றி ஆகும். இதனையும் முழுமையாகக் குறைப்பதற்குத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு மூச்சுடன் இறங்கி உள்ளார். “சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்றும், “ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல; சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும்.” என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது இந்த நான்கு சதவிகிதத்தையும் குறைக்கும் முயற்சிதான்.
உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகளான அமர்த்தியா சென் அவர்களும், ஜீன் டிரீஸ் அவர்களும் ஒரு புத்தகம் எழுதினார்கள். தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சித் திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் என்று எழுதி இருக்கிறார்கள். தமிழ்நாட்டை வளர்த்தது இத்தகைய சமூகநலத் திட்டங்களே எனச் சொல்லி இருக்கிறார்கள். அனைவருக்கும் முழுமையான சமூகநலன் என்பது பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் வேர் என்றும், சமூக சீர்திருத்தம் - பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் அரசியல் அதிகாரம் - கவர்ச்சிகர அரசியலின் பிடிமானம் - ஆக்கபூர்வமான பெண் அமைப்புகள் ஆகியவைதான் இதற்குக் காரணம் என்றும் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
(‘நிச்சயமற்ற பெருமை’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் தமிழிலும் வெளியாகி உள்ளது!) ‘உங்களுக்குப் பிடித்த இலக்கியப் பாத்திரம் எது?' என்று முத்தமிழறிஞர் கலைஞரிடம் கேட்கப்பட்டது. ‘மணிமேகலை கையில் உள்ள அட்சய பாத்திரம்' என்றார் அவர். “கலைஞர் ஆட்சியின் அனைத்துத் திட்டங்களும் அட்சய பாத்திரம் போலவே இருக்கும்” என்றார் தமிழகத்தின் பொருளா தாரப் பேரறிஞர் ஜெயரஞ்சன். மணிமேகலை என்பது காப்பியம். திராவிடவியல் என்பது உயிர்ப்பிக்கும் தத்துவம்!