கொரோனா பேரிடர் தொடங்கிய பிறகு நலிவடைந்த பல்வேறு வகையான தொழில்களும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களின் விற்பனைகள் பாதிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வியாபாரத்தை அதிகரிக்கவும், ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கவும் ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த பல்வேறு வகையான தொழில்களும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து ஏதேனும் ஆலோசனை கூட்டமோ அல்லது ஆய்வறிக்கையினையோ ஒன்றிய அரசு தயார் செய்துள்ளனவா? அப்படியெனில் அதன் விவரங்கள் என்ன? கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு பல்வேறு வகையான பொருட்களுக்கான தேவை மற்றும் விற்பனை குறைந்துள்ளது என ஏதேனும் தொழில் நிறுவனங்களோ, வணிகர்களோ நிதி அமைச்சகத்திடம் விடுத்த கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தவும்.
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது எப்போது என்பது குறித்தும் நிதி அமைச்சகம் ஏதேனும் திட்டம் வகுத்துள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்” எனத் தெரிவித்துள்ளார்.