தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவருமான இளங்கோவன், வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில் 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் வருமான வரி துறைக்கு புகார் சென்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தமிழ்நாடு மாநில தலைமை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றினர்.
அதுமட்டுமல்லாமல் 70 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீட்டு ஆவணங்களையும் கைப்பற்றிய நிலையில், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த லாக்கர் சாவி மூலம், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் 30க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அந்த சொத்து ஆவணங்களையும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுகருமான இளங்கோவன் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில் 30க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.