தேனி மாவட்டத்தின் போடி அருகே வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்த ஆறுமுகம், ஆறாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.
பெயிண்டர், குடை ரிப்பேர் செய்பவர், ஏலக்காய் தோட்ட வேலை, வெளி மாநிலங்களில் துணி விற்பனை எனக் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து வந்துள்ளார்.
வறுமையிலிருந்து விரைவில் மீண்டு விட வேண்டும் என்பதற்காக சினிமா துறையில் நுழையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆனால், எதிலும் வெற்றி கிட்டவில்லை.
ஆனால் இன்று டிஜிட்டல் ஊடகப் பரப்பில் அத்தனை மக்களையும் சென்று சேர்ந்திருக்கிறார் ஆறுமுகம். யூ-டியூபில் ‘‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’ மிகவும் பிரபலமான குக்கிங் சேனல். இதற்கு 46 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்கள். டாடி ஆறுமுகம் என்றால் இன்று தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சமையல் கற்றுக் கொண்ட ஆறுமுகம், பின் அதையே தம் தொழிலாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அதிலும் பெரிய வருமானத்தை ஈட்டமுடியவில்லை.
இந்நிலையில், டிப்ளமோ படித்துவிட்டு சினிமா கனவுடன் சென்னைக்குப் பயணமான இவரது மகன் கோபிநாத் சில மாதங்கள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
திரைத்துறையில் நம்பிக்கை ஒளி இழந்து தனது தந்தையின் சமையல் கலையை வைத்து ஒரு புதிய யோசனையோடு ஊர் திரும்பியிருக்கிறார்.
அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் பரவலான காலகட்டத்தில், யூடியூபில் ஏதாவது முயன்று சம்பாதிக்கும் ஆர்வத்தில், ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’ என்ற பெயரில் ஒரு சேனலை தொடங்கியுள்ளார்.
தன் மகன் கோபிநாத் சொன்னபடி கேமராவுக்கு முன் சமையல் செய்துள்ளார் டாடி ஆறுமுகம். முதலில் நம்பிக்கை இல்லாதிருந்த நிலையில் சில மாதங்களில் வருமானம் சொல்லிக்கொள்ளும்படி வரத்தொடங்கியதால் டாடி ஆறுமுகத்திற்கு நம்பிக்கை பிறந்தது.
இன்று, யூ-டியூப் வருமானத்தின் மூலம் மதுரையிலும், புதுச்சேரியிலும் உணவகங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ‘வாழ்க்கை அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் அற்புதங்கள் ஏராளம்’ எனும் சொற்றொடர் இவர்களுக்கு அத்தனை பொருத்தம்.